பாரா பேட்மிண்டன் சத்தமின்றி சாதித்த மானஸி ஜோஷி

நன்றி குங்குமம் தோழி

விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்ற நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா பேட்மிண்டன் போட்டியும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானஸி நயன ஜோஷி எஸ்.எல்-3 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச் சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான பாருர் பார்மரை 21-12, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மானஸி நயன ஜோஷி மும்பையில் பிறந்தவர். இவரின் தந்தை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மும்பை பல்கலைக் கழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற மானஸி, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை ஒன்றைக் கடக்கும் போது டிரக் ஒன்று மோத விபத்திற்குள்ளானார். மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மானஸியின் உடலில் எலும்பு முறிவுகளும், காயங்களும் நிறைந்திருந்தன. தொடர்ந்து பத்து மணி நேர அறுவை சிகிச்சைக்கு உள்ளான அவரது இடது கால் நீக்கப்பட்டது.

2012ல் செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நிலையில், நடக்க பயிற்சி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நம்பிக்கையை  இழக்காத மானஸி, பாரா பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். தொடக்கத்தில் நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றார். தனது முழு நேரத்தையும் பேட்மிண்டனில் செலவிட தொடங்கியவர், தொடர்ந்து ஸ்கூபா  டைவிங்கிலும் ஆர்வம் காட்டி வந்தார். பணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கி கொண்டவர், 2014ல் தொழில் முறை வீராங்கனையாக மாறினார்.

2015ல் நடைபெற்ற பாரா ஏசியன் போட்டியில் பங்கேற்றவர் அதில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.  தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்கத் தொடங்கினார். இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஜோஷி விளையாடியது எஸ்.எல்-3 பிரிவு பாரா பேட்மிண்டன் ஆகும்.

இது ஒரு கால் அல்லது 2 கால்களையும் இழந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் மற்றும் ஓட முடியாதவர்கள்  விளையாடுவது. பாரா பேட்மிண்டனின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற இந்திய அணியினர் 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களையும் இதில் கைப்பற்றினர்.

சத்தமின்றி சாதனையை நிகழ்த்திய மானஸி, 2020ல் டோக்கியோவில்  நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது கனவு  என்கிறார். கனவு மெய்ப்படும். வாழ்த்துகள் மானஸி..!

தொகுப்பு: மகேஸ்வரி

Related Stories: