ஒன்ஸ்மோர்.

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

முன்னோர் அறிவியல்

மோர்தான் பருகும் பானங்களில் உன்னதமானது ஆகும். பொதுவாக, பால் பொருட்களில் மோர்தான் சிறந்தது என மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். பாலில் இருந்து தயிர், வெண்ணெய், நெய், பனீர், சீஸ் என பல்வேறு வகைகள் இருந்தாலும் மோர்தான் சிறந்தது என கூறுகிறார்கள். மோர் உடலில் தட்பவெட்ப நிலையை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. செரிமான மண்டலத்திற்கு ஏற்ற பானமாக இருக்கிறது.

இதுபற்றி விளக்குகிறார் டயட்டீஷியன் கோவர்தினி.

* நம்முடைய பாரம்பரியத்தில் கூட உணவுக்கு பிறகு மோர் அருந்தும் பழக்கமும், தாகத்திற்கு கூட மோர் அருந்தும் பழக்கமும் இருந்து வந்திருக்கிறது.

* மோரில் இருக்கும் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மோரில் புரோபயாட்டிக் (Probiotic) எனும் பாக்டீரியா உள்ளது. அது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். வயிற்றுப்போக்கை சரி செய்யும். மலச்சிக்கலை குணப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். நம் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவும். அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்னையை சரி செய்யும்.

* நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக மோரை பருக வேண்டும். இது உடலுக்கு தேவையான நீர்சத்தினை அளிக்கிறது. மதிய வேளையில் உணவு அதிகமாக சாப்பிட்டுவிட்டால் வயிறு ஒரு மாதிரி உப்பசமாக இருக்கக் கூடும். அப்பொழுது மோர் குடித்தால் வயிறு உப்புசமாக இருப்பது மாறிவிடும்.

* காரமான உணவு உண்ட பிறகு, சிறிது மோர் அருந்துவது காரத்துக்கு இதமாக அமைவதோடு குடற்பகுதிகள் பாதிக்காமலும் காக்கும்.

* உணவில் இருக்கும் மற்ற ஊட்டச்சத்தை கிரகித்துக்கொள்ள மோர் உதவும். Acid reflux என்கிற அமில எதுக்குதல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும்.

* மோர் உணவில் அதிக Electrolytes அடங்கி உள்ளது. இந்த எலக்ட்ரோலைட்டுகள் உடலின் நீர் வறட்சியை சரி செய்யும்.

* மோரில் புரதச்சத்து நிறைந்துள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையாக உள்ளது. புரதச்சத்து உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும். அதனால் மோர் அருந்தும்போது அதில் இருக்கும் புரதச்சத்து உடம்பில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்றுகிறது.

* பால் பொருட்களில் பால், தயிர், பனீர், பட்டர், சீஸ் போன்ற பொருட்களில் மோர்தான் சிறந்த உணவாக இருக்கிறது. பால் மற்றும் தயிரைவிட மோரில் கொழுப்பு இல்லாமல் இருப்பது மோரின் சிறந்த பலம்.

* மோர் சீக்கிரமாக பசியை தணிக்கும். அதனால் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், கடும் பசியினால் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்கள் மோர் பருகுவதினால் நல்ல பலனைப் பெறலாம்.

* ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தொடர்ந்து மோர் எடுத்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும். இதில் வைட்டமின் B12

உள்ளது.

*நாம் சாப்பிடும் உணவை சக்தியாக மாற்ற உதவும். மோரில் மக்னீஷியம், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடம்புக்கு தேவையான ஊட்டச் சத்தாகும்.

* மோரினை முடிந்த அளவுக்கு மத்து பயன்படுத்தி கடைவது மிகவும் ருசியாக இருக்கும். அரை மணி நேரம் கடைய வேண்டும். நன்றாக நுரை வந்தால் மோர் ரெடியாகி விட்டது என்று அர்த்தம்.

* மோர் பானம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பருகக் கூடிய ஒன்று. குறிப்பாக, இதய நோயாளிகள் தங்களுடைய அன்றாட உணவில் மோர் சேர்த்து வரலாம். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வயிற்றுப் பிரச்னை, செரிமான கோளாறு, இரைப்பை பாதிப்பு, அமிலத்தன்மை பாதிப்பு உள்ளவர்கள் தினமும் தங்களுடைய உணவுக்கு பிறகு ஒரு டம்ளர் மோர் அருந்தினால் நல்ல பயனை அடையலாம்.

* கால்சியம் குறைபாடு உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் போன்ற பிரச்னைகளுக்கும் மோர் அருந்தலாம்.

* ஒருவர் ஒரு நாளைக்கு 200 மிலி மோர் வரை குடிக்கலாம். நம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து 200 மிலி மோர் மூலமாக கிடைக்கிறது. அதுபோல மோர் பானம் என்பது குளிர் காலம், கோடை காலம் மழைகாலம் என எக்காலத்திற்கும் உகந்த பானம்.

* மோர் பருகும்போது உப்பு இல்லாமலோ அல்லது சிறிதளவு உப்பு போட்டோ பருகலாம். மேலும் மோரில் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, மிளகு போன்ற பொருட்களை சேர்த்தும் பருகுவது கூடுதலான சத்துக்களைப் பெற உதவும்.

* பைல்ஸ் பிரச்னை இருப்பவர்கள், அல்சர் பாதிப்பு இருப்பவர்கள், சிறுநீரகத்தில் கற்கள் பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக மோர் அருந்துவது அந்த நோய்களை குணப்படுத்த உதவி செய்யும்.

* உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற இன்று எத்தனையோ டீடாக்ஸ் முறைகளை இன்று மருத்துவ உலகம் சொல்கிறது. அவைகளை விட மோர் சிறந்த மருந்து.

- க.இளஞ்சேரன்

Related Stories: