×

இணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்!

நன்றி குங்குமம் தோழி

சீனாவில் இணையத்தில் வைரலான 15 நொடி வீடியோ ஒன்று, ஒரே நாளில் உலகெங்கும் ஐந்து கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அது, பிரபலங்களுடையதோ, அரசியல் சார்ந்த செய்தியோ, சமூக சிந்தனையை தூண்டுவதோ அல்லது கலாச்சார சீர்கேடுகளை சுட்டிக்காட்டும் வீடியோவோ கிடையாது. அந்த வீடியோவில் இருந்தது நான்கு பெண்கள்... இவர்கள் நால்வரும் 60 வயதைக் கடந்தவர்கள். தோழிகளான இவர்கள்தான் மொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

இந்த நால்வரும் முதுமையின் அழகை, உலக மக்களுக்கு அற்புதமாக உணர்த்தியுள்ளனர். முதுமையை தடுப்பது நடக்காத காரியம். அதனால் அதைக்கண்டு அஞ்சி வெறுத்து ஓடாமல், முதுமையை ஏற்றுக்கொண்டு அதற்குறிய பெருமையுடன் வாழ வேண்டும் என்பதையும்  வலியுறுத்தி வருகின்றனர். இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க, அவர்கள் எடுத்த வித்தியாசமான கருவிதான் மாடலிங்.  

வாங் ரென்வென், லின் பியாவோ, சன் யாங் மற்றும் வாங் ஜிங்குவோ ஆகிய நால்வரும் இருபது வருட நண்பர்கள். இவர்களது கம்பீரமான அழகும், இளமை ததும்பும் சிரிப்பும்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது ஃபேஷன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த பாட்டிகளுக்கும் மாடலிங் துறைக்கும் துளியும் சம்மந்தமில்லை.

இவர்கள் அனைவரும் மாடலிங்கை தவிர்த்து வேறு துறையில் தான் வேலைப் பார்த்துள்ளனர். யாருமே மாடலிங்கில் சிறிதும் தொடர்பில்லாத வேலைகளையே செய்து வந்திருக்கின்றனர். வாங் ரென்வென், ஒரு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வேலை பார்த்தவர், லின் பியாவோ கூடைப்பந்து வீராங்கனை, சன் யாங் பள்ளி ஆசிரியை, வாங் ஜிங்குவோ அரசாங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்தவர்.

இப்படி வெவ்வேறு துறைகளைச் சார்ந்து வாழ்ந்த நால்வரும், வேலைகளும் கடமைகளும் முடித்து ஓய்வுபெற்றதும், தங்கள் வாழ்க்கை தனக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடிவு செய்து மாடலிங் துறைக்கு வந்துள்ளனர்.

ஃபேஷன், மாடலிங் துறைகளை பொறுத்தவரை, 30 வயதை தாண்டினாலே வாய்ப்புகள் குறைவதுதான் வாடிக்கை. அதிலும், குறிப்பாக பெண்கள் இந்த குறிப்பிட்ட வயதை தாண்டியதுமே, வாய்ப்புகள் இல்லாமல் வேறு துறைகளுக்கு சென்றுவிடுவார்கள்.

ஆனால் சீனாவில் 60 வயதை தாண்டிய வயதான பெண்கள், பேரப்பிள்ளைகள் பெற்று, தங்கள் வேலைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ஃபேஷன் துறைக்கு வந்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறதுமுதலில் மேக்-அப் செய்துகொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவே கூச்சப்பட்ட இவர்கள், சில நாட்களிலேயே தங்கள் பயத்தையும், தயக்கத்தையும் கடந்து, பல ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் ஹை-ஹீல்ஸ் அணிந்து கேட்-வாக் செய்யும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கின்றனர்.

நரைத்த முடியுடன் நேர்த்தியாக மாடலிங் செய்யும் இவர்களை பார்க்கவே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். தெருவில் செல்லும் போது பல பேர், இவர்களை அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

தாங்களும் வயதானபின் இவர்களைப்போல அழகாக இருக்க வேண்டும் என்று கூறி அதற்கு டிப்ஸ் கேட்கின்றனர். எங்கும் இல்லாத அளவிற்கு சீனாவில்தான், வயதானவர்கள் ஃபேஷன் ஷோக்களில் அதிகம் கலந்துகொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஃபேஷன் என்றாலே அது இளைஞர்களுக்கானதாக பார்க்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆடைகளும் அணிகலன்களும்தான் வருகின்றது. இதுவும் ஒருவிதமான பாகுபாடுதான். இந்த உலகம் முழுவதுமே இளம் வயதினரை முன் வைத்துதான் இயங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறது.

அதனால் 40 வயதை கடந்தவர்கள், தங்கள் குடும்பத்திற்காகவும், அவர்கள் பிள்ளைகளுக்காகவும் தியாகம் செய்து வாழ வேண்டும் என்ற கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது மாற வேண்டும். அனைத்து வாய்ப்புகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் Elderly - Friendlyயாகவும், அனைத்து வயதினருக்கும் உரியதாகவும் மாறவேண்டும் என்று நான்கு தோழிகளும் தெரிவித்துள்ளனர்.

வயதானவர்கள், வாழ்க்கையில் எல்லா அனுபவங்களையும் பெற்று, வாழ்க்கை பாடத்தை முழுமையாக படித்த புத்திசாலிகள். ஆனால் இந்த சமூகம், வயதானாலே அவர்கள் இனி சாதிக்க, புதிதாக கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்பது போலவும், அவர்களுக்கு குடும்பத்தை தாண்டிய சந்தோஷங்கள், ஆர்வமும் எதுவும் இருப்பதில்லை என்று தீர்மானித்துவிடுகின்றனர். மக்களின் இந்த மனநிலையை மாற்றவே இவர்கள் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!