செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

குரல் இனிமையால் நடிகையான சௌகார் ஜானகி

அந்தக் கால சினிமா நாயகிகளுக்கே உரிய தோற்றப் பொலிவு கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. அதிக உயரமோ கண்கவரும் பேரழகி என்றோ கவர்ச்சிகரமான நடிகை என்றோ யாரும் சொல்லவில்லை. ஒருவிதத்தில் சொல்லப் போனால், பார்வைக்கு அவர் ஒரு நடிகையாகவே தோன்றவில்லை. மிக மெலிந்த எளிய தோற்றத்தில் அன்றாடம் நாம் பார்க்கின்ற ஒரு சராசரிப் பெண்ணாகவே அவர் படங்களிலும் கூட தோன்றினார். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி அவரிடம் ஒரு கம்பீரம் குடியிருந்தது. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டார்.  1949 முதல் 1974 வரை கால் நூற்றாண்டுக் காலம் முதன்மை நாயகியாகத் திரையுலகில் பங்காற்றியவர். அவரின் திரையுலகப் பயணம், அவ்வப்போதான சிறு சிறு இடைவெளிகளுக்கு இடையிலும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிக நீண்ட காலம் திரையில் நடித்தவர் என்ற பெயரையும் அதன் மூலம் பெற்றவர். ‘சவுக்காரு’ தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தான் அறிமுகமான படத்தின் பெயராலேயே ‘சௌகார் ஜானகி’ யாக இன்று வரை அறியப்படுகிறார். 19 வயதில் தொடங்கிய நடிப்பின் மீதான ஆர்வம் 88 வயதைத் தொட்டபோதிலும் இன்னமும் குறையாமல் பெங்களூருக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருப்பவர். திறமைக்குத் திருமணம் ஒரு தடையல்ல இப்போது போல் திருமணமானால் வாய்ப்புகள் பறி போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாத காலம் அது. பல நடிகைகள் திருமணம் செய்துகொண்ட பின்னரே திரையில் நடிப்பதற்கும் வந்தார்கள்.

அவர்களில் ஜானகியும் ஒருவர். திருமணமாகாத நடிகைகளும் கூட திருமணத்துக்குப் பின்னும் எந்தத் தடையுமின்றித் திரையில் மின்னிய பொற்காலமாகவும் அக்காலம் இருந்தது. திருமணம், குழந்தைப் பேறு என இயல்பான வாழ்க்கையினூடே தங்கள் நடிப்பைப் பலரும் தொடர்ந்திருக்கிறார்கள். அதை எல்லாம் ஒரு குறைபாடாகவும் அன்றைய ரசிகர்கள் யாரும் கருதவில்லை. தங்கள் கனவுக் கன்னிகள் கல்லால் செதுக்கப்பட்டவர்கள் அல்ல; ரத்தமும் சதையுமான சாதாரண மானிடப் பிறவிகள்தான் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள். தங்கள் நாயகிகள் திருமணம் செய்து கொள்வதையும் பிள்ளை பெற்றுக் கொள்வதையும் அவர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள்.

ஜானகியின் திரையுலக வாழ்வு அவரது திருமணத்துக்குப் பின்னரே நிகழ்ந்தது. சொல்லப் போனால் கையில் தன் மூன்று மாத சிறு குழந்தையுடன்தான் திரையுலகுக்குள் நுழைந்தார் என்பதை இன்றைய நவீன உலகமும் சமூகமும் நம்புமா என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில் திருமணம் ஒரு தகுதி இழப்பாகவே இப்போதைய திரையுலகில் கருதப்படுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு... குரல் வளத்தால் வீட்டுக்கு அழைத்து வந்த சினிமா வாய்ப்புவெங்கோஜி ராவ் - சாச்சி தேவியின் மூத்த மகளாக ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் 1931, டிசம்பர் 12ல் பிறந்தவர் சங்கரம்ஞ்ச்சி ஜானகி. ஆம், அது அவரது குடும்பப் பெயர்.

தந்தையார் வெங்கோஜி ராவ் அந்தக் காலத்திலேயே பேப்பர் டெக்னாலஜி படித்தவர், அத்துடன் லண்டனில் மூன்றாண்டுகள் அது தொடர்பான பணியையும் மேற்கொண்டவர். தன் பணியின் பொருட்டு பல மாநிலங்களிலும் பணியாற்றியவர். அதனால் குழந்தைகளும் பல ஊர்களில் படிக்க வேண்டிய நிலை. ஜானகிக்கு 12 வயதானபோது, தந்தையார் வெங்கோஜி ராவ் தன் பணியின் பொருட்டு சென்னைக்கு வந்ததால், ஜானகியின் பள்ளிப் படிப்பு சென்னையில் சாரதா வித்யாலயாவில் தொடர்ந்தது. ஜானகிக்கு நல்ல குரல்வளம் இருந்தது. சங்கீதமும் கற்றுத் தேறியவர். அப்போதெல்லாம் சென்னை வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதில் ஜானகியும் பங்கேற்றிருக்கிறார். அத்துடன் வானொலி நாடகங்கள் மூலமும் அவரது குரல் வீடுகள்தோறும் ஒலித்திருக்கிறது.

சிறுமி ஜானகியின் இனிமையான குரல் வளம் பலரையும் ஈர்த்தது. அவர்களில் ஒருவர் விஜயா  வாஹினி ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி. இந்தக் குரலுக்கு சொந்தக்காரச் சிறுமி யாராக இருக்கும் என்று வானொலி நிலையத்தில் விசாரித்துக்கொண்டு, மாம்பலம், போக் சாலையில் குடியிருந்த ஜானகியைத் தேடி நேராக வீட்டுக்கே வந்து விட்டார். ‘நல்ல குரல் வளம் இருக்கிறது; சினிமாவில் நடிக்கலாமே’ என்று தூபம் போட்டு விட்டுப் போய் விட்டார். ஜானகிக்கும் அதில் விருப்பம் இருந்தது. ஆனால், வீட்டாருக்கோ அதில் துளியும் விருப்பமில்லை. அம்மாவும், அண்ணனும் பெரும் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், எங்கே மகள் தங்களை மீறி சினிமா என்று போய் விடுவாளோ என்ற பயத்தில், அவசரம் அவசரமாக தங்கள் உறவுக்குள்ளேயே மாப்பிள்ளை பார்த்து அப்போது குண்டூரில் ரேடியோ என்ஜினியராக இருந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவருக்குத் திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.

விஜயவாடாவில் புதுக் குடித்தனம் தொடங்கிய ஜானகிக்கு நீண்ட காலம் அங்கு வசிக்க முடியாமல் போனது. கணவர் வேறு வேலை தேடி மதராஸ் வந்ததால், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பினார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. வறுமை வீட்டுக்குள் கோலோச்சத் தொடங்கியது. முளையில் கருகிய கனல் மீண்டும் துளிர்த்தது நிறைவேறாமல் போன ஜானகியின் சினிமா ஆசை முளையிலேயே கருகிப் போனாலும் அந்தக் கனல் முற்றிலும் அணைந்து போய் விடவில்லை. மீண்டும் அது துளிர் விட்டது. ஆனால், கணவருக்கு நிரந்தர வேலையில்லை. வருமானம் இல்லாததால் உணவுக்கே திண்டாடும் நிலை.

இப்போது கூடுதலாகக் கையில் மூன்று மாதக் குழந்தை வேறு. ஜானகியும் தன் கணவரிடம் ஏற்கனவே திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததைப் பற்றியும், தான் நடிக்க முடியாமல் போன கதையையும் சொல்லி, ‘இப்போது மீண்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று ஆலோசனை கேட்டார். கணவரும் நீண்ட ஆலோசனைக்குப் பின் அதற்கு முழு மனதுடன் சம்மதித்தார். பொருளாதார நெருக்கடி, மனைவியின் ஆசை எல்லாமும் அவரை சம்மதிக்க வைத்தது. ஜானகி மீண்டும் பி.என்.ரெட்டியைச் சந்தித்துத் தன் தற்போதைய நிலையையும் விளக்கி வாய்ப்பு கேட்டார். ஜானகியின் நிலை ரெட்டியை சம்மதிக்க வைத்தது.

ஏற்கனவே அவர் அழைத்த படத்தில் நாயகி வாய்ப்பு தவறிப் போனாலும் ஒரு சிறு வேடத்தில் வந்து தலைகாட்டி விட்டுப் போகும் வாய்ப்பைத் தற்காலிகமாக அளித்தார். ஆனால், மிகக் குறுகிய காலத்துக்குள் ரெட்டியின் சகோதரர் நாகி ரெட்டி எடுத்த தெலுங்குப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் நாயகனுக்கும் அதுவே முதற்படம். படமும் மிக நன்றாக ஓடி வசூலையும் குவித்தது. நாயகியான ஜானகிக்கும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. கதாநாயகியாக நடித்த இந்தப் படத்திற்குக் கிடைத்த ஊதியம் 2500/- ரூபாய். இன்றுவரை அந்தப் படம் மிகுந்த கலை நேர்த்தி மிக்கதாகவும் அழகியலோடும் இருக்கிறது.

ஜானகியுடன் நாயகனாக அறிமுகமான அந்த நாயகன் பின்னர் தெலுங்குத் திரையுலகம் கொண்டாடும் நாயகனாகவும் ஆந்திர தேசத்தின் முதலமைச்சராகவும் மாறிய என்.டி.ராமாராவ். அந்தப் படம் ‘சவுக்கார்’. உடன் நடித்தவர்களான சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் அனைவருமே மிகப் பெரும் ஆகிருதிகளாகவும் பின்னர் மாறினார்கள். இப்போது வரை அறிமுகமான படத்தின் பெயராலேயே ஜானகி, ‘சவுக்கார்’ ஜானகியாக அறியப்படுகிறார். 1950ல் வெளியான இதே ‘சவுக்காரு’ திரைப்படம் பதினைந்து ஆண்டு இடைவெளியில் மீண்டும் 1965ல் விஜயா வாஹினியின் தயாரிப்பாகவே தமிழில் ‘எங்க வீட்டுப் பெண்’ என்ற பெயரில் வெளியானது.

தெலுங்கு ‘சவுக்காரு’ படத்தில் நாயகியாக ஜானகி அறிமுகமானதைப் போலவே தமிழில் நடிகை விஜய நிர்மலா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், தெலுங்குப் படம் அளவுக்குத் தமிழில் அது பெரிய வெற்றி பெறவில்லை.

பாரதிதாசனின் அழகுத் தமிழைப் பேசி அசத்தியவர் முதல் படம் பெரு வெற்றியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மிக மெலிந்து சிறு பெண்ணாகத் தோற்றம் அளித்ததுதான். கதாநாயகி வாய்ப்பளிக்கப் பலரும் தயங்கினார்கள். ஆனால், சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த ‘வளையாபதி’ தமிழில் நாயகியாகும் வாய்ப்பை ஜானகிக்கு அளித்தது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘வளையாபதி’ க்குக் கதை வசனம் எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இப்படத்தில் நாயகனாக அறிமுகமான முத்துக்கிருஷ்ணன் அதன் பின்னர் ‘வளையாபதி’ முத்துக்கிருஷ்ணன் என்றே அறியப்பட்டாலும் பெரிய நடிகராக அவரால் மாற இயலவில்லை.

இப்படம் வெளியான அதே நேரத்தில் ஏ.வி.எம். தயாரிப்பில், கலைஞர் மு.கருணாநிதி கூர்மையாக வசனம் எழுதிய ‘பராசக்தி’ மிகப் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்ததால், ‘வளையாபதி’ வெற்றி பெற முடியாமல் போனது துயரம்தான். சமகால அரசியலைத் துல்லியமாகப் பேசிய ‘பராசக்தி’ யின் வெற்றிக்கு முன், பாவேந்தர் பாரதிதாசனே வசனம் எழுதியிருந்தாலும் ‘வளையாபதி’ பணிந்து போனது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஜானகி, ‘வளையாபதி’ போன்ற படத்தின் தூய தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் பேசி நடித்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த அளவு ஈடுபாட்டுடன் மனப்பாடம் செய்து வசனங்களைப் பேசி அசத்தியிருந்தார் அவர்.

அப்போதைய படங்களில் இப்போது போல் டப்பிங் பேசும் வசதிகளும் இல்லை. படப்பிடிப்பின்போதே எவ்வளவு நீள வசனம் என்றாலும் பேசி நடிக்க வேண்டிய சூழலில், மூன்று நிமிடங்களுக்கு மேல் நீளும் வசனங்களைப் பேசி நடிப்பதெல்லாம் அவ்வளவு எளிய காரியமில்லை. ஆனாலும் ஜானகி தன் அபார திறமையால் அதைச் சாதித்தார். அதுவும் அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். கலைஞர் கருணாநிதி அதற்காகத் தன்னை நேரில் சந்தித்தபோது ‘நல்லா தமிழ் பேசுறீங்க’ எனப் பாராட்டிப் பேசியதையும் பலமுறை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார் சவுக்கார் ஜானகி. பாட்டிக்கு இரவல் குரல் தந்த பேத்தி டப்பிங் தொழில்நுட்பம் அறிமுகமான பின்னரும் கூட அனைத்து மொழிகளிலும் சவுக்கார் ஜானகியே டப்பிங் பேசியிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அவருடைய பேத்தியும் 80களில் நடிகையாக அறிமுகமான வைஷ்ணவி, தன் பாட்டிக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. அந்தப் படம் கே.பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நாயகனாக நடித்த ‘அழகன்’. இப்படத்தில் நடிகை மதுபாலாவுக்கு பாட்டியாக, டாக்டராக சிறு வேட மேற்று நடித்திருந்தார். சவுக்கார் ஜானகியின் குடும்பத்திலிருந்து வேறு எவரும் நடிக்க முன்வராத சூழலில், அவருடைய பேத்தியான வைஷ்ணவி மட்டுமே நடிக்க வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாருக்கும் விட்டுத் தராத தன் குரலை தன் பேத்திக்காக விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

தென்னிந்திய மொழிகளின் நட்சத்திரம் ஆனார்... ஜானகி தமிழில் அறிமுகமான படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், தமிழ்த் திரையுலகம் அதன் நாயகியைக் கைவிட்டு விடவில்லை. அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளித்துக் கைதூக்கி விட்டது. அதற்கான தகுதியும் அவருக்கு முழுமையாக இருந்தது. அடுத்தடுத்து விஜயா  வாஹினி, மாடர்ன் தியேட்டர்ஸை தொடர்ந்து ஜெமினி, ஏ.வி.எம் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களில் எல்லாம் வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் துவங்கின. அடுத்து ஜெமினி, தான் இரு மொழிகளில் தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜானகிக்கு வாய்ப்பளித்தது. படிப்படியாக தென்னிந்திய மொழிகளின் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகையானார் ஜானகி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் வங்காளம் என 387 படங்களில் நடித்தவர். அனைத்து மொழிகளின் மிகப் பெரும் வெற்றிப் படங்களிலும் ஜானகியின் பங்களிப்பு இருந்தது. திரைப்படங்களுடன் மட்டும் நின்று விடாமல் மேடை நாடகக் குழுக்

களுடன் இணைந்து மேடை நாடகங்களிலும் பங்கேற்றவர். 300 மேடையேற்றங்கள் கண்டவர். திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த 1960 காலகட்டத்தில் தொடங்கி 1995 வரை இடைவிடாமல் நாடகங்களில் பங்கேற்றுள்ளார். நாடகங்களைப் பொறுத்தவரை அவருக்கு இணையாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமே.

தமிழில் எம்.ஜி.,ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜக்கையா, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் பிரேம் நஸீர் என தென்னிந்திய மொழிகளின் முதன்மை நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். அடுத்தக்கட்ட நாயகர்களான ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் என அனைவருடனும் நடித்தவர். ஏறக்குறைய 70 ஆண்டுக் காலத்தில் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த பெருமைக்கு உரியவர். இந்தித் திரையுலகில் நடிகர் தேவ் ஆனந்த், பிரான், அசோக் குமார், காமினி கௌஷல் என பலரும் அவ்வாறே மிக நீண்ட காலம் திரையுலகில் தொடர்ந்தவர்கள். பெண்களில் எம்.என். ராஜத்தையும் அந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். சௌகார் ஜானகியின் தமிழ்த் திரையுலகப் பங்களிப்பு மற்றும் அவரது பிரபலமான  பாடல்கள்  குறித்து... அடுத்த இதழில்...

(ரசிப்போம்!)    

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

Related Stories:

>