இன்று உலக யானைகள் தினம் வனத்தை வளமாக்கும் யானைகள்

சத்தியமங்கலம் : கடலும், காட்டுயானையும் எப்போதும் மனிதர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. அதன்படி வனவிலங்குகள் என்றாலே அவைகளை காண்பதற்கு மனிதர்களுக்கு ஆர்வம். அதிலும் யானை என்றால் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பது இயல்பு. இதில் என்ன வியப்பு என்றால் உலகத்தில் வசிக்கும் மொத்த யானைகளில் நமது இந்தியாவில் மட்டும் 60 சதவிகித யானைகள் வசிக்கின்றன.

உலகத்தில் வசிக்கும் மொத்த யானைகளின் எண்ணிக்கை 45 ஆயிரம். அதில் 27 ஆயிரம் யானைகள் இந்தியாவில் வசிக்கின்றன. உலகத்தில் ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள் மட்டுமே உள்ளன. வனத்தை வளமாக்குவதில் யானைகள் மிக முக்கிய பங்காற்றுவதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். வனப்பகுதியில் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ளும் யானைகள் வனத்தை வளமாக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றன.

வனப்பகுதியில் உள்ள செடிகொடிகளின் இலை, தழைகளை உணவாக உட்கொள்ளும் யானைகள் வனப்பகுதியில் இடும் சாணத்தில் அதிக அளவு விதைகள் இருப்பதால் வனமெங்கிலும் இயற்கையாகவே விதைகளை தூவி மரங்கள் வளர்வதாக தெரிவிக்கின்றனர். இதனால் யானைகள் தான் வனத்தை புதுப்பித்து வருகின்றன. அல்லது உருவாக்குகின்றன.

தமிழகத்தில் யானைகள் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை இரண்டும் இணையும் பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் வேலியில் அதிக அளவில் நடமாடுகின்றன. யானைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் அனைத்தும் இங்கு கிடைப்பதால் யானைகளின் முக்கிய வலசை பாதையாக இது அமைந்துள்ளது. தற்போது யானைகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வனம் வளமாகி மழை வளம் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினரும் யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வறட்சிக்காலங்களில் யானைகள் தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தற்காலிக தொட்டிகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்கின்றனர். யானைகளுக்கு விருப்ப உணவாக வாழை, கரும்பு உள்ளது. இதனால் வனத்தையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தனது இஷ்டம் போல் தின்று வருகின்றன. விவசாயிகள் சிலர் தங்கள் பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காக்க சட்டவிரோதமாக உயரழுத்த மின்வேலி அமைத்து விடுகிறார்கள்.

 இதனால் உணவு தேடி வரும் யானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து விடுகின்றன. உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தால் குறிப்பிட்ட நபர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது யானைகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.  

யானைகளை பாதுகாத்தால் வனவளம் பெருகும். வனவளம் பெருகினால் மழை வளம் பெருகும் என்பது குறித்து வனத்துறையினரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று உலக யானைகள் தினத்தன்று யானைகளை காப்பது குறித்த உறுதிமொழியை ஏற்போம்.

இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் அசோகன் கூறியதாவது:

தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதி சுருங்க, சுருங்க யானைகளின் எண்ணிக்கையும் சுருங்கி வருகிறது. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே காடுகளின் பரப்பளவு அதிகரிக்கும். ஒரு காட்டு யானை தன்னுடைய எச்சத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரம் விதைகளை தூவுகிறது. இதனால் அதிக அளவில் மரம், செடி, கொடிகள் முளைத்து வனம் பசுஞ்சோலையாக மாறுகிறது.

ஒரு காட்டு யானை தினமும் 100 லிட்டர் முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்.  காடுகளின் பரப்பளவு தற்போது அதிகரித்து வருவதால் யானைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. யானைகளின் எச்சங்களில் உள்ள விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாக உள்ளது. யானைகள் தனக்கான உணவு தேடி ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிலோ மீட்டர் வரை செல்வதோடு  150 கிலோ தீவனம் உட்கொள்ளும்.  

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் குறைவாக உள்ளன.  உடல் நலம் குன்றிய யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளன. கிணற்றில் விழுந்து தவித்த யானைகளை காப்பாற்றுதல், இறக்கும் தருவாயில் இருந்த யானைகளை காப்பாற்றுதல் உள்ளிட்ட கடந்த 4 ஆண்டுகளில் மட்டும்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 25 யானைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: