×

சீனித்துளசியில ஒரு டீ போடு!

நன்றி குங்குமம் தோழி

நமது அன்றாட வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கோ, டீ கடைகளுக்கோ செல்லும் போது காபி, டீயில் சர்க்கரை வேண்டாம் அல்லது பாதி அளவு போதும் என்று கூறுவது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கு காரணம் இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையே (சீனி) கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்க்கரைக்கு மாற்றுதான் சீனித்துளசி.

இதை நாம் தினமும் டீ, காபி மற்றும் உணவு பண்டங்களில் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்துவதனால் சர்க்கரை வராமலும், வந்தவர்களுக்கு நோயினை கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்க முடியும் என்கிறார் சீனித்துளசியில் டீத்தூள் தயாரித்து விற்பனை செய்துவரும் மதுரையை சேர்ந்த ஜெ.முத்துக்கிருஷ்ணன். ‘‘நான் கடந்த 2014ம் ஆண்டு மூலிகை ஏற்றுமதி செய்யலாம் என்று திட்டமிட்டு அதற்கான தீவிர தேடலில் இருந்தேன். அப்போதுதான் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சர்க்கரை உபயோகத்தைத் தவிர்த்து வருவது குறித்து தெரியவந்தது. இதற்கு மாற்றாக குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படும்படி மூலிகைக் கண்டறிய வேண்டும் என்று தீவிர தேடுதலில் ஈடுபட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதேநேரத்தில் தேநீரில் பயன்படுத்தும் பால் மற்றும் வெள்ளைச் சர்க்கரையினால் நம் தலைமுறையினருக்கு ஆரோக்கிய கேடுகளே ஏற்பட்டு வருகிறது. இந்தச் சர்க்கரைக்கு மாற்றாக மூலிகையான சீனித்துளசி டீத்தூள் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில், ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, லெமன்கிராஸ், துளசி, முருங்கை, புதினா, வல்லாரை, மிளகுகீரை, ரோஜா இதழ், சீமைசாமந்தி பூ போன்ற பத்து வகை மூலிகை டீக்களிலும் சர்க்கரைக்கு பதில் சீனித்துளசி சேர்க்கப்பட்ட டீத்தூள் உள்ளன.

சீனித்துளசி தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபோடியானா (Stevia Rebaudiana). இது மிட்டாய் இலை (Candy Leaf), இனிப்பு இலை (Sweet Leaf), சர்க்கரை இலை (Sugar Leaf) என்றும் அழைக்கப்படுகிறது. சீனித்துளசியின் இனிப்பு சுவைக்கு அதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபாடியோசைடு (Rebaudioside) ஆகிய வேதிப்பொருட்களே காரணமாக உள்ளது. கரும்புச்சர்க்கரையைவிட இதில் 30 மடங்கு இனிப்பு அதிகம் என்றாலும் குறைந்த அளவில் சர்க்கரை மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மேலும் இதில் உள்ள கிளைகோசைடு குளுக்கோஸ் கலோரிகளையும் கார்போஹைட்ரேட்டுகளையும் உருவாக்காது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

சர்க்கரையுடன் ஒப்பிடும்போது சீனித்துளசியில் கலோரி, கார்போஹைட்ரேட்டின் அளவு மிகவும் குறைவாகவே இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனித்துளசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் சர்க்கரையை தொடர்ந்து பயன்படுத்துவதால், பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனித்துளசி சர்க்கரை குழந்தையின் உடல் நலனை பாதுகாக்க உதவும். உலக அளவில் Monk fruitக்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை தன்மை இருக்கிறது.

வட இந்தியாவில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போதுதான் புழக்கத்தில் வரத்தொடங்கியுள்ளது. பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு பிறகே சீனித்துளசியை அறிமுகம் செய்துள்ளோம். இது வயிற்று பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை தருகிறது. உடல் எடையை குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவ்வளவு மருத்துவத் தன்மை கொண்ட சீனித்துளசியில் பல வகையான டீத்தூள் மற்றும் லிக்விட் சுகர், பவுடர் சர்க்கரையும் அறிமுகம் செய்து இருக்கிறோம். இனி சர்க்கரையை கண்டு பயப்படத் தேவையில்லை’’ என்றார் ஜெ.முத்துக்கிருஷ்ணன்.

தொகுப்பு: தயாளன்

Tags :
× RELATED அனைத்து கடல் உணவுகளும் எங்க சிக்னேச்சர் டிஷ்தான்!