பாக்., சீனாவுக்கு ஓடியவர்களுக்கு சொந்தமானவை இந்தியாவில் அனாதையாக கிடக்கும் 12,600 சொத்துகள்: அசையும் சொத்து மதிப்பு மட்டும் ரூ.2,707 கோடி

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே 1965ல் நடந்த போருக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள்  தங்கள் சொத்துகளை விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். சிலர் சீனாவுக்கும் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். இவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகள், ‘எதிரி சொத்துகள்’ என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை கைப்பற்றி நிர்வாகம் செய்வதற்காக கடந்த 1968ல் ‘எதிரிகள் சொத்து பாதுகாப்பு சட்டம்’ என்ற சட்டம், அன்றைய ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது.

இந்த சொத்துகள் அனைத்தையும் பாதுகாத்து நிர்வாகம் செய்வதற்காக, ‘இந்திய எதிரிகள் சொத்து பாதுகாவலர்’ என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில் குடியேறியவர்களின் 12,600 சொத்துக்களும், சீனாவில் குடியேறியவர்களின் 126 சொத்துக்களும், இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், இவர்களின் அசையும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றில் அசையும் சொத்துகள் மட்டுமே விற்கப்பட்டு, அதன் மூலம் கிடைத்த ரூ.2,707 கோடி, எதிரிகள் சொத்து பாதுகாவலர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே மிகவும் குறைந்த அளவாக, ஆந்திராவில் ஒரே ஒரு எதிரி சொத்து மட்டுமே உள்ளது. மிகவும் அதிகப்பட்சமாக உத்தர பிரதேசத்தில் 6,255 சொத்துகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 4,088, டெல்லி 658, கோவா 295, மகாராஷ்டிரா 207, தெலங்கானா 158, குஜராத் 151, திரிபுரா 105, பீகாரில் 94 எதிரி சொத்துக்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையிலும், இந்த சொத்துகள் எதையும் இதுவரையில் ஒன்றிய அரசு விற்பனை செய்யவில்லை. எதிரிகள் சொத்தின் தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பது இதுவரையில் கணக்கிடப்படவில்லை.  

* தமிழகத்தில் 34 சொத்துக்கள்

தமிழகத்தில் மொத்தம்  34 எதிரி சொத்துக்கள் உள்ளன. இதில், அதிகப்பட்சமாக விழுப்புரத்தில் 16 சொத்துகளும், சென்னையில் 14 சொத்துக்களும் உள்ளன. இதில் அதிகப்பட்சமாக பல்லாவரத்தில் 8 சொத்துக்கள் உள்ளன. வேலூரில் 4 சொத்துக்கள் உள்ளன.

Related Stories: