டெல்டா வைரஸ் தாக்குதல் தீவிரம் அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்பு: அடுத்த வாரம் 2 லட்சத்தை தாண்டும் என எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை ஆட்டிபடைத்து வருகின்றது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்து விட்டது. இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ், அமெரிக்கா உட்பட 135 நாடுகளில் தற்போது அதிக வீரியத்துடனும், வேகமாகவும் பரவி வருகிறது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி போடாத பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் சராசரியாக நாள்தோறும் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்டா வைரசின் தாக்கமே இதற்கு காரணம். இந்த நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றது, கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாதது ஆகியவை காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அடுத்த வாரங்களில் இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டக் கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: