ரூ.10,603 கோடிக்கான விண்ணப்பங்கள் தேக்கம் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தராமல் இழுத்தடிப்பு: கிடப்பில் போட்டுள்ள நிறுவனங்கள்; கடனில் தத்தளிக்கும் குடும்பங்கள்

புதுடெல்லி: கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் காட்டி வருவதால், இறந்தவர்களின் குடும்பங்கள் கடனில் தத்தளித்து வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ காப்பீடு செய்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது செய்யப்பட்ட செலவு தொகையை அவர்களின் குடும்பத்தினர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர்.

ஆனால், ‘காப்பீடு தொகைக்கான நோய்கள் பட்டியலில் கொரோனா தொற்று இல்லை,’ என கூறி 3 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளன. இதன் காரணமாக, ரூ.10,603 கோடிக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கடன் வாங்கி மருத்துவமனை கட்டணத்தை செலுத்திய குடும்பத்தினர், அதை திருப்பி செலுத்த முடியாமல் கடனில் தத்தளித்து வருகின்றனர். இந்த நிதியாண்டில் ஜூலை வரை ரூ.389 கோடி மதிப்புள்ள 49,452 கொரோனா காப்பீடு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த நிதியாண்டு காலத்தில் ரூ.14,560 கோடி மதிப்புள்ள 9 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா காப்பீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அதில், 8 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.7,833 கோடி வழங்கப்பட்டு இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

* பூஸ்டர் தடுப்பூசி வேண்டாம்

கொரோனா தடுப்பூசி போட்டு வரும் பணக்கார நாடுகளும், தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடுகளும் தனது நாட்டு மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு, பூஸ்டர் டோசும் போட போவதாக கூறி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ‘‘பல ஏழை நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசியை கூட போடவில்லை. ஏழை நாடுகளில் 10 சதவீதம் மக்களுக்காவது தடுப்பூசி  கிடைப்பதை உறுதி செய்ய,  பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை கைவிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: