விவசாயிகள், மக்கள் பிரச்னைகள், பெகாசஸ் குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஒன்றிய அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகள், மக்கள் பிரச்னைகள், பெகாசஸ் குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பெகசாஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் கடந்த 12 நாட்களாக முடங்கியது. நேற்று முன்தினம் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்பிக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று 13வது நாள் கூட்டத்தொடர் நடந்தது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், பெகாசஸ் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அமளிக்கு இடையே அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021 விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நேற்று காலை மாநிலங்களவையிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவை ஒத்திவைப்புக்கு முன் வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘மசோதாக்கள் சராசரியாக ஏழு நிமிடங்களுக்கு ஒரு மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுகிறது. கடைசி நேரத்தில் வணிகத்தின் துணைப் பட்டியலைக் கொண்டு வருவது சரியல்ல,’’ என்றார். முன்னதாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெகாசஸ் விவகாரம் பற்றி விவாதம் செய்வதில் இருந்து அரசு விலகுவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. மக்கள், விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் பெகாசஸ் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க, எங்களை குறி வைத்து அரசு அச்சுறுத்த முயல்கிறது. ஆனால், நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர் முழுவதும் போராடுவோம்,’’ என்றார்.

* அரை டஜன் அமைச்சர்கள் அவைக்கு வர மாட்டார்களா?

அமைச்சர் சில காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு வர முடியாத சூழல்நிலை ஏற்பட்டால், தனது சகாக்கள் மூலமாக அவையில் ஆவணங்களை தாக்கல் செய்வார்கள். மாநிலங்களவையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முரளீதரன், 6 அமைச்சர்களின் சார்பாக நேற்று ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘அமைச்சர் எப்போதாவது சில காரணங்களால் சபைக்கு வர இயலாதபோது, தனது சகாக்களின் மூலமாக ஒரு ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் அரை டஜன் அமைச்சர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதை நாம் காண்கிறோம். அந்த அரை டஜன் அமைச்சர்கள் மாநிலங்களவையை மதிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அது நடக்கிறது, நீங்கள் அதை எப்படி செய்ய முடியும்?,’ என்று கேள்வி எழுப்பினார்.

* இளைஞர்கள் பேசினால் மோடி அரசு கவிழும்

இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘உங்கள் மொபைல் போன் உங்கள் குரல். நரேந்திர மோடி பெகாசஸ் என்ற எண்ணத்தை என்னுடையது மட்டுமல்ல, ஒவ்வொரு இளைஞரின் மொபைல் போனில் வைத்துள்ளார். மக்களின் குரலை ஒடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் இளைஞர்கள் உண்மையை பேசத் தொடங்கும் நாளில், மோடி அரசு கவிழும். மோடி பிரதமராக இருக்கும் வரை நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாது,’’ என்றார்.

Related Stories:

>