×

நாடு முன்னோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது தேச விரோதச் செயல்: பிரதமர் மோடி கவலை

புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவது தேச விரோதமானது. நாடு முன்னோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த குறிப்பிட்ட பகுதி நியாயவிலை கடையை சேர்ந்த பயனாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக நேற்று கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: தற்போது மாநிலங்களுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்கள் பயனாளிகளை சென்று சேர்வது மிகுந்த திருப்தி அளிக்கிறது. கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்களை பெறுவதில் இருந்து யாரும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்காகதான் இந்த விழிப்புணர்வு பிரசாரம். முந்தைய ஆட்சியின்போது ஏழைகளுக்கான உணவு தானியங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல்களை தடுப்பதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நாட்டின் வளர்ச்சி பாதையில் தடைக்கற்களை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே எண்ணம். அவர்களின் செயல் தேச விரோதமானது. இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒருபுறம் நாடு ஒலிம்பிக் பதக்கங்களுக்காக கோல் அடித்து தனது இலக்கை அடைந்து வருகிறது. மற்றொரு புறம், சிலர் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக சுய இலக்கை அடைய முயற்சிக்கின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.
நாடாளுமன்ற முடக்கத்துக்கு ஒன்றிய அரசுதான் காரணம் என நேற்று முன்தினம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டின. இந்நிலையில், நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

* பல் உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்?
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி மற்றும் போலீஸ் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் கலந்துரையாடினார். அப்போது, பல் மருத்துவராக இருந்து காவல் பணிக்கு வந்துள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்ஜோத் சிமி என்ற பெண் அதிகாரியுடன் பேசிய மோடி, ‘பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தீர்கள்?’ என்று நகைச்சுவையாக கேட்டார். அதற்கு பதிலளித்த சிமி, ‘‘காவல் துறையும் மக்களின் வலியை தீர்க்கும் பணி என்பதால், இதை தேர்வு செய்தேன்,’ என்றார். கலகலப்பான இந்த உரையாடலின் விவரம் நேற்று வெளியானது.

Tags : PM Modi , No one can stop the country from moving forward. Opposition parties blocking parliament is anti-national: PM Modi
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...