ரூ.2 கோடி மோசடி விவகாரம் முன்னாள் நிர்வாகிகள் மீது மருந்து வணிகர் சங்கத்தினர் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அளித்த புகார் மனு விவரம்: திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய மண்டல சங்கங்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த 20 வருடங்களாக செலுத்திய ரூ. 2 கோடி தொகையை முன்னாள் நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் அடுத்த மூன்று வருடங்களில் சங்கத்திற்கு இடம் வாங்கி கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஏதும் செய்யாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாவட்ட வெள்ளிவிழா பொதுக்குழுவில் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கி கணக்குகள் மற்றும் பணத்தை ஒப்படைக்க அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை கணக்கு மற்றும் பணத்தை ஒப்படைக்காமல் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் தாங்கள் செய்த கையாடலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து சங்க பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து எஸ்பி வருண்குமாரிடமும் புகார் மனு அளித்தனர்.

Related Stories: