திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் வெளியே தெரிந்த சடலத்தால் பரபரப்பு: தகனமேடை அமைக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் வெளியே தெரிந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் இங்கு தகன மேடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் சுடுகாடு உள்ளது. இங்கு கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் கூட இன்றும் புதைக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையின்போது, 2 அல்லது 2அரை அடி ஆழத்தில் பள்ளம் தோன்றி  அடுத்தடுத்து சடலங்கள் வந்ததால் அவசர கதியில் புதைத்துள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.  

நாய்கள் மேப்பம் பிடித்து உடலை திண்பதற்கு தோண்டி வெளியே எடுத்து போடும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நந்தியாற்றின் கரையோரம் வசிக்கும் மற்றும் ஆற்றின் வழியாக செல்லும் மக்கள், பிணவாடை தாங்க முடியாமல் தவித்தனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சடலங்களை புதைப்பதற்கு பதில் எரிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், நந்தியாற்றின் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ஒரு சடலம் நேற்றுமுன்தினம் இரவு வெளியே தெரிந்தது.

சிதைந்த நிலையில் தலை மற்றும் ஒரு கால் இல்லாத உடல் மைதானத்தில் இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவரை கொலை செய்து வீசினார்களா அல்லது புதைக்கப்பட்ட சடலத்தை நாய்கள் வெளியே எடுத்து வந்ததா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில்,’’ கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது, எரிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நந்தியாற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் ஏராளமான சடலங்களை அவசர கதியில் புதைத்துவிட்டனர். இதனால் மணல் அரிப்பு ஏற்படும்போது சடலங்கள் வெளியே வந்து விடுகிறது. இப்படியாக, தற்போது ஒரு சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். எனவே, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தவிர்க்க சடலத்தை புதைக்காமல் எரிக்க வேண்டும்’ என்றனர். எனவே, நந்தியாற்றின் கரையோரம் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது எரிக்க தகனமேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகத்திடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>