வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு தராததால் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சீல்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே, வாடிக்கையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்காததால், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை அருகே படூர் மற்றும் புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் பசிபிகா மற்றும் ஷில்வனாஸ் என்ற தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளை (வில்லா) கட்டி விற்பனை செய்கிறது. இதில் தனி வீடு ஒன்றை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் ரெட்டி (48) என்பவர் முன்பதிவு செய்தார். 2 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து  அவர், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது புகார் செய்தார்.

இரு தரப்பையும் விசாரித்த ஒழுங்கு முறை ஆணையம் வாடிக்கையாளர், வீட்டுக்காக செலுத்திய மொத்த தொகை மற்றும் அதற்கான வட்டி, அபராதம் உள்பட ரூ.2 கோடியே 40 லட்சத்து 1 ஆயிரத்தை  திரும்ப வழங்கும்படி உத்தரவிட்டது.

ஆனால், ஆணையம் உத்தரவிட்டபடி, வாடிக்கையாளருக்கு தனியார் நிறுவனம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்குகு எதிராக வசூல் நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு பணத்தை திரும்ப அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, ஒரு வாரத்தில் பணத்தை வழங்குவதாக அந்நிறுவனம் அவகாசம் கேட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த பின்னரும், வாடிக்கையாளருக்கு பணத்தை வழங்காமல் இழுத்தடித்ததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள தாம்பரம் ஆர்டிஓ உத்தரவிட்டார். அதன்பேரில், வட்டாட்சியர்கள் வண்டலூர் ஆறுமுகம், திருப்போரூர் ராஜன், துணை வட்டாட்சியர் தமிழரசன், வருவாய் ஆய்வாளர்கள் மாம்பாக்கம் தனலட்சுமி, கேளம்பாக்கம் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் படூரில் உள்ள அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>