பழைய மாமல்லபுரம் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து எரிந்த கார்

மாமல்லபுரம்: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிளார்க் வேலை செய்து வருபவர் நாராயணசாமி (57). நேற்று காலை நாராயணசாமி, தனது சொந்த வேலை சம்பந்தமாக ஓஎம்ஆர் வழியாக மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டார். காரை நாராயணசாமி ஓட்டி சென்றார். மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்து அங்குள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், காரில் இருந்து பெட்ரோல் கசிந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காருக்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நாராயணசாமியை லேசான காயங்களுடன் மீட்டனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார், மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்தில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து எலும்புக் கூடாக மாறியது. இதையடுத்து போலீசார், உயிர் தப்பிய நாராயணசாமி பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வயலூரை சேர்ந்தவர் குப்பன் (50) விவசாயி. இவர், தனது டிராக்டரில் டிப்பர் இணைத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். நேற்று மதியம் குப்பன், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி கொண்டு சாலையில் ஏற முற்பட்டார். அப்போது, சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்வயரில் வைக்கோல் உரசியது. இதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், அவர் கீழே குதித்து ஓடினார். அந்த நேரத்தில், காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென பரவி வைக்கோல் முழுவதும் பற்றி எரிந்தது. தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள், வைக்கோல் முழுவரும் எரிந்து சாம்பலானது. புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>