மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மொளச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுபாட்டில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட துவக்க விழா நேற்று  நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி வரவேற்றார். எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, எழிலரசன், வட்டார மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மேலும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 2 மாதத்துக்கான மருந்து பெட்டகம் வழங்கினார். பின்னர் மருந்து பெட்டகம் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைக்கபட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுல்ராஜ், முத்துசுந்தரம், ஊராட்சி செயலர்கள் மாம்பாக்கம் ஆனந்தன், மண்ணூர் சரவணன், நீலகண்டன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் பிரியா ராஜ் வரவேற்றார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து மாத்திரை அடங்கிய மருத்துவக் குழு செல்லும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவக்குழு சென்ற வீட்டுக்கு சென்று, அங்கிருந்த நோயாளியிடம், அமைச்சர் உரையாடினார்.

அப்போது அவர்களிடம், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு 2 மாதங்களுக்கான மாத்திரைகள் வீடு தேடி வந்து தரப்படும் என்றும், நோயாளிக்கு கூடுதல் மருத்துவ உதவி தேவைப்பட்டால் பிசியோதெரபி மருத்துவர், பொது மருத்துவர் வந்து தேவையான உதவிகளை செய்வர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 45000 நோயாளிகளும், கேளம்பாக்கம் பொது மருத்துவமனையின் கீழ் உள்ள கிராமங்களில் 3400 நோயாளிகளும் பயன்பெறுவர் என அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>