×

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நடிகர் தனுஷ் 48 மணி நேரத்திற்குள் நுழைவு வரி செலுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷ், கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு ரூ.60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை நடிகர் உத்தரவிட்டது.
இந்த வரியை வசூலிக்க தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015 அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ் நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில் என்ன பணி அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்று ஏன் குறிப்பிடவில்லை.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார், பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?  மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதானே. ஒரு நாளைக்கு அரை லிட்டரோ அல்லது ஒரு லிட்டரோ பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் வரி விலக்கு கோரி நீதிமன்றத்தை அணுகவில்லையே.  

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள். ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள். அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்க வேண்டும். நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2.15க்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.  வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வணிக வரித் துறை தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் வி.வேலுச்சாமி, மனுதாரர் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய பாக்கி உள்ளது என்றார். அப்போது தனுஷ் தரப்பில், கொரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Dhanush ,Rolls Royce ,UK ,ICC , Actor Dhanush has to pay entry tax on Rolls Royce car imported from UK within 48 hours: ICC orders
× RELATED என்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ்...