வெறுப்பு விதைகளை தூவுகிறவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

சென்னை: ”மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை தூவுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஓய்வே இல்லாமல், ஒவ்வொரு விநாடியும் தமிழகத்தின் வளர்ச்சியை தவிர வேறு சிந்தனையே இல்லாமல் உழைத்து வருகிறீர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய எல்லைகளையும் தாண்டி, சர்வதேச நாடுகளிலும் தங்களது நிர்வாக சிறப்பையும், மக்கள் நலம் சார்ந்த தங்கள் அரசின் அணுகுமுறைகளையும் பாராட்டி மகிழ்கிறார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் உங்களது புதிய நிர்வாக முயற்சிகளையும், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயக பெருந்தன்மையையும் பார்த்து வியப்படைவதோடு மட்டுமல்லாமல், தங்களது சீரிய தலைமையின் கீழ், தமிழகம் தென்கிழக்கு ஆசியாவின் முதலீட்டு மையமாக விரைவில் மாற உள்ளது என்று உறுதிபட தெரிவிக்கின்றனர். தங்களது தலைமையில் பீடுநடைபோடும் தமிழகத்தின் வெற்றி பயணத்தை விரும்பா சிலர் இந்த ஆட்சியின் முனைப்யையும், கவனத்தினையும் சிதறடித்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

சாதி, மதம், மாவட்டம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழர் என்ற ஒரே அடையாளத்தோடு ஒன்றிணைக்கவும், ஒற்றுமைப்படுத்திடவும் தாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் மக்கள் மத்தியில் பெறுகின்ற பெரும் வரவேற்பை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள அவர்கள் தங்களது அதிகார கனவை நிறைவேற்றுவதற்காக தமிழர்களை சாதியின் பெயராலும், பிராந்தியத்தின் மதத்தின் பெயராலும் பிரித்தாழ சதி திட்டம் தீட்டி வருகின்றனர். மக்கள் மத்தியில் மத துவேஷத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர். மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை தூவுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தங்களது அரசு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அப்படிப்பட்டவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், தடுப்பு காவல் சட்டத்தில் கூட கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: