×

ஈமு கோழி மோசடி வழக்கு யுவராஜ், பாஜ து.தலைவர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.2.47 கோடி அபராதமும் விதிப்பு

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சுதி ஈமு பார்ம்ஸ், ஹேச்சரீஸ் என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதில், நாகை தெற்கு மாவட்ட பாஜக துணை தலைவர் தமிழ்நேசன் (33), சேலம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் (42), ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த வாசு (52) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த ஈமு பண்ணைகளில் இரு திட்டங்களில் பொதுமக்களிடம் இவர்கள் பணம் வசூலித்து வந்தனர். திட்டம் 1ல் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு செட் அமைத்து தரப்படும். முதலீட்டாளர்களுக்கு 6 ஈமு கோழி, தேவையான தீவனங்கள், மருந்துகள் வழங்கப்படும். மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக முதலீட்டாளர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தரப்படும், ஆண்டு முடிவில் ஊக்க தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திட்டம் 2ல் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி வழங்கி நிறுவனமே பராமரிக்கும். மாதம் 8 ஆயிரம் ரூபாயும், ஆண்டு முடிவில் 20 ஆயிரம் ரூபாயும் ஊக்க தொகை வழங்கப்படும். 2 ஆண்டு பராமரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிறுவனத்தினர் 121 முதலீட்டாளர்களிடம் 2 கோடியே 70 லட்சத்து 15 ஆயிரத்து 550 ரூபாய் பெற்றுள்ளனர். இந்த தொகையை முறையாக வழங்காமல் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருச்செங்கோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 2012ம் ஆண்டு செப்.23ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக 139 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை கோவை முதலீட்டாளர் நல நீதிமன்ற (டான்பிட்) நீதிபதி ரவி விசாரித்து தமிழ்நேசன், யுவராஜ், வாசு ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அப்போது நாகை தெற்கு மாவட்ட பாஜ துணை தலைவர் தமிழ்நேசன் கோர்ட்டில் ஆஜாராகவில்லை. இவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

Tags : Emu ,Yuvraj ,BJP , Emu chicken fraud case: Yuvraj, BJP vice-president jailed for 10 years
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...