×

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது: பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸ் சுற்றி வளைப்பு

புதுக்கோட்டை: கும்பகோணம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்திருப்பதால் இந்த பகுதி மக்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றுதான் அழைப்பார்கள்.

இந்நிலையில், நிதி நிறுவனத்தின் மூலம் குறுகிய காலத்தில் டெபாசிட் தொகையை இரட்டிப்பாக தருவதாக கூறி விளம்பரம் செய்ததால் பொதுமக்கள் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதன்மூலம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். உரிய காலத்தில் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து கும்பகோணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜபருல்லா, பைரோஸ்பானு தம்பதி தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதில் தங்களிடம் ரூ.15 கோடி வாங்கி விட்டு திரும்ப தராமல் மோசடி செய்ததாக கூறி இருந்தனர்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சகோதரர்கள் வைத்திருந்த 12 உயர் ரக கார்களை முதலில் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட 6 தனிப்படை போலீசார், இவர்களின் தொலைபேசி எண்களை கண்காணித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது பண்னை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தவர்களை நேற்று மாலை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர்.

Tags : Helicopter brothers arrested for financial fraud
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு