×

வீட்டுக்கே நேரடியாக வந்து சிகிச்சையளிக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம்

*  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் * சென்னை, 6 மாவட்டங்களில் துவக்கம் * முதல்கட்டமாக 1 கோடி பேர் பயன்பெறுவர்

கிருஷ்ணகிரி: வீட்டுக்கே நேரடியாக வந்து சிகிச்சையளிக்கும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் காணொலி மூலம் சென்னை உட்பட 7 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை துவக்கினார்.  அப்போது அவர், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுவதன் மூலம், ஆண்டு இறுதிக்குள் ஒரு கோடி பேர் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர், 2 பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார். இத்திட்டம் சூளகிரியில் தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்தபின் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவிற்கே ஒரு முன்னோடித் திட்டமாக விளங்கக்கூடிய வகையிலே ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்கிற ஒரு மகத்தான திட்டத்தைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்திருக்கிறோம். மருத்துவமனைகளைத் தேடி வரக்கூடிய மக்கள், அந்தச் சூழலை மாற்றக்கூடிய வகையில், அதாவது மக்களை தேடி மருத்துவம் செல்லும் என்ற காலத்தை இப்போது நாம் உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம். நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய வீட்டிற்கே சென்று, சில அவசியமான மருத்துவச் சேவைகளை இதன் மூலமாக நாம் வழங்கப் போகிறோம். இது படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் நிச்சயமாக விரிவுபடுத்தப்படும். அவர்களுக்கான கூடுதல் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வழங்குவோம். இதற்காக முதல் கட்டமாக, 242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக,  30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு: டயாலிசிஸ்-க்கு நோயாளிகள் மலை கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு மிக சிரமமாக இருக்கிறது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அதுவும் செய்யப் போகிறோம், அதற்கான முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. போர்டபிள் இயந்திரங்கள் மூலமாக அதையும் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.கெயில் நிறுவனம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்களே.விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது.

2000ம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் ஓசூர் பகுதியில் உள்ளவர்களுக்கெல்லாம் பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால். வருவாய்த்துறை ஆவணங்களில் பட்டா கொடுத்ததற்கானவிவரங்கள் ஏற்றவில்லை. இதுபோன்று ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவிலும் இருக்கிறது.ஓசூரில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இந்தக் குறைபாடுகள் இருக்கிறது. கடந்தகால ஆட்சியில் அதை முறைப்படுத்தவில்லை என்பது உண்மை. அதை முறைப்படுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.இவ்வாறு முதல்வர் கூறினார்.10 லட்சம் தடுப்பூசி கையிருப்பு: முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறுகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பொறுத்தவரை, சுமார் 25  ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

புதிய பணியிடங்கள், ஏற்கனவே இருக்கும் பணியாளர்கள் இவர்களை கொண்டு மொத்தம் 25 ஆயிரம் பேர் இந்தக் களப்பணியில் ஈடுபடவிருக்கிறார்கள். கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் கடந்த 10 நாட்களாக எல்லா மருத்துவமனைகளிலும் வழங்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் கடந்த மாதம் 72 லட்சம் தடுப்பூசி தருவதாகச் சொன்னார்கள். 19 லட்சம் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே கூடுதலாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தந்திருக்கிறது. இந்த மாதத்திற்கு 79 லட்சம் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
 இதுவரையில் வந்திருப்பது 2 கோடியே 39 லட்சம். இன்னும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசிகள் எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த நோய்க்கு சிகிச்சை
முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ திட்டத்தின் மூலம் 45  வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து  அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக, ரத்த  அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை, இதர நோய்கள், குழந்தைகளினுடைய  பிறவிக் குறைபாடுகள் இதையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது இந்தத்  திட்டத்தின் முக்கியப் பணியாக இருக்கும். இதில், பொது சுகாதாரப்  பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கெடுத்து அவர்களுடைய சேவையை  ஆற்றவிருக்கிறார்கள்.  முதல் கட்டமாக, 1,264 பெண் சுகாதாரத்  தன்னார்வலர்களும், 50 பிசியோதெரபி மருத்துவர்களும், 50 செவிலியர்களும்  இல்லம் தேடி வரும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள். இந்தத்  திட்டத்தின் நோக்கத்தை மக்கள் அனைவரும் உணர்ந்து, இந்தச் சேவையை நல்ல  வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்  என்றார்.

மாற்றுத்திறனாளியிடம் பரிவு காட்டிய முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கவும், கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கவும், அதிகாலை முதலே சாமனப்பள்ளி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். விழா இடத்திற்கு வந்த முதல்வர், நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் கூட்டத்தில் பரிதவித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பரிவுடன் பேசிய முதல்வர், கோரிக்கையை கேட்டறிந்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதேபோல் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கைகால் வழங்கி, நடக்கச் செய்து பார்த்ததும் கூட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நிமிடம் முகத்த காட்டுங்க...பெண்ணின் உற்சாக கோரிக்கை
சூளகிரியில் நிகழ்ச்சிகளை முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காரில் புறப்பட்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு முதல்வருக்கு கையசைத்து வரவேற்பு தெரிவித்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முதல்வர் முகக்கவசம் அணிந்தபடி காரில் சென்றார். அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த ஓசூர் பழைய டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர், ‘‘உங்களது முகத்தை காண நாங்கள் காத்திருக்கிறோம். ஒரே ஒரு நிமிடம் மாஸ்க் எடுத்துட்டு, உங்கள் முகத்தை காட்டுங்க’’ என்று அன்புடன் கோரிக்கை விடுத்தார். இதைக்கேட்டு புன்னகைத்த முதல்வர், முகக்கவசத்தை கழற்றினார். அப்போது அந்த பெண், ‘‘விடாமுயற்சி, விஸ்வ ரூப வெற்றி அதற்கு பெயரே ஸ்டாலின்’’ என்று உற்சாகம் பொங்க கூறி வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags : Come home directly and treat Medicine program in search of people
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்