டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுப்பு குழந்தை பிழைக்காது வேண்டாம் என எழுதிக்கொடுத்து சென்ற பெற்றோர்

* தொடர் கண்காணிப்பினால் குழந்தை நலம்

* குணமானதும் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு

சென்னை: குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்த நிலையில் பிழைக்காது வேண்டாம் என்று பெற்றோர்கள் எழுதிக் கொடுத்து சென்றனர். மருத்துவர், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தொடர் கண்காணிப்பில் குழந்தை நலமுடன் உள்ளது. பூரண குணமடைந்தவுடன் காப்பக்கத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 3வது பெண் குழந்தை பிறந்துள்ளது. 2 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதால் குழந்தையின் எடை 1.6 கிலோவாக குறைந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அந்த குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். அதன்படி, கடந்த ஜூலை 3ம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு ஆக்சிஜனுடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாக கலந்து இதயத்தில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையில் இருந்தது. அதனால் குழந்தை இனி பிழைக்காது என கருதிய பெற்றோர், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யுங்கள், நாங்கள் ஊருக்கு கொண்டு செல்கிறோம் என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் குழந்தை இருக்கும் நிலையில் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். ஆனாலும் குழந்தையின் பெற்றோர் விடாப்பிடியாக கண்டிப்பாக குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டனர். அதன்பிறகு பெற்றோர், ‘குழந்தை எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆதரவின்றி இருந்த அந்த குழந்தையை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கவனித்து வருகின்றனர். மேலும் 12 வார கால மருத்துவ கண்காணிப்பை முடித்தவுடன் குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் காரணமாக குழந்தையின் எடை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முழுவதும் முடிவடைந்து குழந்தை பூரணமாக குணமடைந்த பிறகு முறையாக அரசு காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: