போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக சஸ்பெண்ட் தலைமை ஆசிரியை மீது போலீசில் புகார்

பாணாவரம்: பாணாவரம் அருகே போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் அரசு வேலை பெற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமையாசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம்,  மாலையமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சத்தியபாமா. இவர் கடந்த 1997ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் மூலம், சத்யபாமாவின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், சத்தியபாமா தன்னுடைய 10ம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழை போலியானதை சமர்ப்பித்து அரசு வேலை பெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அறிவுறுத்தலின்பேரில், அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், கடந்த சில நாட்களுக்கு முன் தலைமை ஆசிரியை சத்தியபாமாவை ஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பாணாவரம் போலீசில் நேற்று சத்யபாமா மீது புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து போலி சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: