கேரளாவில் 11 நாளில் 2.17 லட்சம் பேர் பாதிப்பு: கொரோனாவை தடுக்க புதிய நிபந்தனை..! சந்தை, வங்கிக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஒரு தடவை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே கடைகள், சந்தைகள், வங்கி உள்பட பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அரசு புதிய நிபந்தனையை விதித்து உள்ளது. கேரளாவில் கடந்த 11 நாளில் 2.17 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி உள்ளது. நேற்று 22,414 பேருக்கு தொற்று உறுதியானது. நோய் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து முழு ஊரடங்கை கடுமையாக்க அரசு தீர்மானித்து உள்ளது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், கடைகளுக்கு செல்வோருக்கு நிபந்தனைகள் கடுமையாக்கப் பட்டு உள்ளன.  

அதன்படி கடைகள், சந்தைகள், வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், திறந்த வெளி சுற்றுலா மையங்கள் ஆகியவற்றுக்கு செல்பவர்களும், பணி புரிபவர்களும் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாவது முதல் டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வந்து குணமடைந்தவராகவோ இருக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் இடங்களை தவிர மற்ற பகுதிகளில் திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்கலாம்.

ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். சுதந்திர தினமான 15ம்  தேதி, ஓணம்பண்டிகையான 22ம்தேதி ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட மாட்டாது. பள்ளிகள், கல்லூரிகள், டியூசன் சென்டர்கள், சினிமா தியேட்டர்களுக்கு திறக்க அனுமதி இல்லை. ஆன் லைன் டெலிவரிக்காக மட்டும் வணிக வளாகங்கள், மால்களை திறக்கலாம். திருமணம், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். வழிபாட்டு தலங்களில் அதிகபட்சமாக 40 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். வங்கிகள் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை  6 நாள் செயல்படலாம் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: