பூஸ்டர் தடுப்பூசி டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்..! உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு வேண்டுகோள்..!

ஜெனீவா: உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதற்கு எதிரான தடுப்பூசிகள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் மக்களுக்கு போடப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இதில், தடுப்பூசி  உற்பத்தி செய்யும் நாடுகள், சில வல்லரசு நாடுகள் தங்களது மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் ‘பூஸ்டர்’ டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட விரும்புகின்றன.

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகள் இதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட கிடைக்காத சூழல் நீடிக்கிறது. இதனால், குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘பல நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியே கிடைக்கவில்லை. உலகளவில் 10 சதவீதத்தினருக்காவது தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது, கொரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதில் பயன் தருமா? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: