×

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..! அரைக்கம்பத்தில் அதிமுக கொடி: கட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு, அ.தி.மு.க. கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அவைத்தலைவரான இ. மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், இன்று பிற்பகல் 3.42 மணிக்கு அவர் காலமானார். கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராக பணியாற்றியவர்.

 கடந்த 2010ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அவை தலைவர் பதவியில் இருந்தவர் மதுசூதனன். அ.தி.மு.க.வின் தொடக்க நாள் முதல் இமை மூடும் வரை ஓயாது உழைத்தவர் மதுசூதனன் என அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை, அவரது மறைவையொட்டி கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.  கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.  இதன்படி வருகிற 7ந்தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Tags : BC , AIADMK leader Madhusudhanan passes away: 3 days of mourning AIADMK flag at half-mast: Party administration announcement
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...