திரிணாமுல் காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி..!!

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் அமளி மூண்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 13வது நாளாக கூடிய மாநிலங்களவையில் அவைக்கு அமைச்சர்கள் வராதது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பிரச்னை எழுப்பினார். அமைச்சர்களுக்கு பதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரே தொடர்ந்து பதிலளித்து வருவதாக அவர் முறையிட்டார். இதற்கு கொரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று அவை தலைவர் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் அவையில் நுழைய முயன்ற போது தடுத்த பாதுகாவலரை தாக்கியதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், அவையில் இருந்து தனது கைப்பையை எடுக்கவே குறிப்பிட்ட உறுப்பினர் உள்ளே சென்றதாக தெரிவித்தார். அவரை மீண்டும் சஸ்பெண்ட் செய்தது நியாயம் அல்ல என்று ஆவேசப்பட்டார். இதுகுறித்து சுகேந்து சேகர் ராய் பேசியதாவது, உறுப்பினர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வெளியே ஹாலில் உட்கார்ந்து இருந்தனர். உறுப்பினர்களின் கைப்பைகள் அவையில் இருந்தன. அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கூட்டம் நடைபெறாத சூழலில் உள்ளே சென்றனர். உறுப்பினர் தமது கைப்பையை எடுக்கவே உள்ளே சென்றார் என்று குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் அமளி மூண்டது. இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. மக்களவை கூடியதும் நாடாளுமன்றம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்ற கூட்டு குழுக்களில் இடம்பெற்ற உறுப்பினர்கள்  விவரம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பெகாசஸ் உளவு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை பின்னர் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>