×

ஆண்டிபட்டி-தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்: ரயில்வே கேட்டுகள் மூடலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

தேனி :ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில்பாதைக்கான ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தபோது, ரயில்வே கேட் மூடப்பட்டதால், கடும் வெயிலில் காத்திருந்தும், அவசர வேலைக்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மதுரை - போடிநாயக்கனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரயில்பாதை கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மதுரை - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் மதுரையிலிருந்து ஆண்டிபட்டி வரை ஏற்கனவே, பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து பெங்களூர் தென் சரக முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது. தற்போது ஆண்டிப்பட்டி-தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து, நேற்று மதியம் ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்டு தேனி ரயில் நிலையம் வரை அகல ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. ரயில் இன்ஜினுடன் துணை முதன்மை பொறியாளர் சூர்யமூர்த்தி, உதவி நிர்வாக பொறியாளர் சரவணன் மற்றும் சீனியர் செக்சன் இன்ஜினியர் ஜான்பிளமின்ட் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆண்டிபட்டியில் இருந்து 17 கிமீ தூரத்தை 80 கிமீ வேகத்தில் சுமார் 15 நிமிடத்தில் கடந்து வந்துள்ளோம். இதில் ரயில் தண்டவாளங்கள் தகுதியாக உள்ளது. இதனை விரைவில் பெங்களூருவில் இருந்து முதன்மை பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்த உள்ளார். முதன்மை பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்கு பிறகு மதுரையில் இருந்து முதற்கட்டமாக பணிகள் முடிவடைந்துள்ள மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இயக்கப்படுமா என்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரயில் சோதனை ஓட்டத்திற்காக தேனி நகரில் அரண்மனைப்புதூர் அருகே உள்ள ரயில்வே கேட், தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட், தேனி நகர் பாரஸ்ட் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் ஆகியவை மூடப்பட்டன. இதனால் தேனியில் மதுரை ரோடு, நேருசிலை, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு, அரண்மனைப்புதூர் விலக்கு, என்.ஆர்.டி ரோடுகள் போக்குவரத்து ெநருக்கடியால் ஸ்தம்பித்தது. எனவே, ரயில் போக்குவரத்துத் தொடங்கும் முன்பாக தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட், அரண்மனைப்புதூர் விலக்கில் உள்ள ரயில்வே கேட் ஆகியவற்றில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மேம்பாலம் கட்ட அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Tags : Andipatti ,Theni , Andipatti-Theni, railway line, test run
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...