பந்தலூர் அருகே கல்லீரல் பாதித்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு கிராம மக்கள் நிதியுதவி: அரசு உதவ கோரிக்கை

பந்தலூர்:  பந்தலூர் அருகே கல்லீரல் பாதித்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுமக்கள் நிதி உதவி அளித்தனர்.  பந்தலூர் அருகே எருமாடு ஓனிமூலா பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்தியா. இவர்களது 9 மாத பெண் குழந்தை ஜெய்பிரபா மஞ்சக் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பித்தப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர். மேலும், குழந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை அல்லது வேலூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும், செலவு ரூ.35 லட்சம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். கூலி வேலை செய்து வரும் பிரபாகரனுக்கு அவ்வளவு பணம் திரட்ட முடியவில்லை. குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரியவே, நேற்று சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி, துணைத்தலைவர் சந்திரபோஸ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா மாஸ்டர், யூனியன் கவுன்சிலர் யசோதா, எருமாடு வியாபாரிகள் சங்க தலைவர் அலியார், தாளூர் கல்லூரி தாளாளர் ராசித்கஷாலி, எருமாடு எல்ப்லைன் அறக்கட்டளை நிர்வாகிகள், அப்துல் கலாம் அறக்கட்டளையினர், சினேக கூடு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பிரபாகரன் வீட்டிற்கு சென்று குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: