வடமாநிலங்களில் மவுசு அதிகரிப்பால் விறுவிறுப்பாக நடக்கும் விறகு கரி உற்பத்தி

மானாமதுரை:  கோடையை போல வெயில் கொளுத்துவதால் மானாமதுரை வட்டாரத்தில் விறகு கரி உற்பத்தி அதிகரித்துள்ளது.  தென்மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. மானாவாரி விவசாயம் மூன்று மாதங்களுக்கு மட்டும்தான். மற்ற மாதங்களில் தரிசு நிலங்களில் வளரும் சீமை கருவேல மரங்களில் இருந்து விறகு கரி உற்பத்தி நடந்து வருகிறது. மானாமதுரை வட்டாரத்தில் கடந்த 45 நாட்களாக கோடைகாலத்தை போல கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் நீர்நிலைகள், கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதால் விவசாயம் சார்ந்த பணிகள் நடைபெறவில்லை. மாறாக சீமை கருவேல மரங்களை வெட்டி அவற்றை விறகு கரி உற்பத்தி செய்யும் மூட்டம் போடும் தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தயாராகும் விறகுகரி மூட்டைகளில் நிரப்பப்பட்டு மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா, மேகாலயா, திரிபுரா, அஸ்ஸாம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இம்மாநிலங்களில் தலைநகரான மும்பை, டில்லி,கொல்கத்தா போன்ற இடங்களில் விறகு கரிகளுக்கு அதிக மவுசு காரணமாக வடமாநில வியாபாரிகள் இக்கரியை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இதனால் மானாமதுரை வட்டாரத்தில் கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. இது குறித்து சசிக்குமார் கூறுகையில், கிராமங்களில் தற்போது விவசாயப் பணிகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் விறகு வெட்டும் வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். மழைகாலம் துவங்கி விட்டால் காடுகளுக்குள் லாரிகள், டிராக்டர்கள் செல்ல முடியாது என்பதால் மழை துவங்கும் முன் விறகு வெட்டப்பட்டு கரிமூட்டத்திற்கு அனுப்பப்படும். கரியாக்கப்பட்ட விறகுகள் லாரிகளில் மானாமதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில்களில் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் விறகுகளை மூட்டம்போடு பணி பல கிராமங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related Stories:

>