வனப்பகுதியில் விடப்பட்டு மீண்டும் மசினகுடி திரும்பிய ரிவால்டோ யானையை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை

கூடலூர்: வனத்தில் விடப்பட்டு மீண்டும் மசினகுடி திரும்பிய ரிவால்டோ யானையை மீண்டும் அடர்வனப்பகுதியிலோ, முதுமலை முகாமிற்கோ கொண்டு செல்லும் திட்டம் இல்லை என தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வனத்தில் சுற்றித்திரிந்த ரிவால்டோ என்ற யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தினர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து யானையை பிடித்த வனத்துறையினர் அதனை மசினகுடி அருகே உள்ள மரக்கூண்டில் அடைத்து 85 நாட்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, யானை குணமான நிலையில் கடந்த 2ம் தேதி லாரியில் ஏற்றி சிக்கல்லா வனப்பகுதியில் விடுவித்தனர். ஆனால், ரிவால்டோ யானை நேற்று முன்தினம் தெப்பக்காடு வழியாக மீண்டும் மசினகுடி நோக்கி வந்தது.

நேற்று அந்த யானையை தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  சேகர்குமார் நீரஜ் பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மீண்டும் தனது பழைய வாழ்விடத்திற்கு வந்துள்ள ரிவால்டோ யானையை வேறு வனப்பகுதியிலோ அல்லது முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமிலோ கொண்டு செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை. மாறாக, அதன் வாழ்விடத்திலேயே அதனை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த யானையை 24 மணி நேரமும் கண்காணிக்க வனத்துறை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் உடனடியாக அங்கு செல்ல மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், இந்த யானை ஏற்கனவே ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் உணவு சாப்பிட்டு வந்த பழக்கத்தால் மீண்டும் ஊருக்குள் செல்லலாம்.  அதை தடுப்பதற்கும் கும்கி யானைகளை கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

ரிவால்டோ யானையின் இயற்கையான வாழ்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை யானை ஊருக்குள் வந்தால் அதற்கு உணவு அளிப்பதோ, அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து மனித வாடை இல்லாமல் செய்யும்போது யானை வனப்பகுதியில் உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும். யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் கண்காணிப்பு பணியும் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மசினகுடி சுற்று வட்டார பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே எஸ்ஐ என்று அழைக்கப்பட்ட யானை இதேபோல் ஊருக்குள் வந்து வீடுகளில் உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தது. ரிவால்டோ யானையும் அதே பழக்கத்தை கொண்டிருப்பதால் அதனை கட்டுப்படுத்துவது சிரமமான காரியம். எனவே,  யானையை முதுமலை முகாமிற்கு கொண்டு சென்று பாதுகாப்பதே சிறந்தது’’ என்றனர்.

Related Stories:

>