விழாக்காலத்தில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்க வேண்டும்!: மாநில அரசுகளை உஷார்படுத்தும் ஒன்றிய அரசு..!!

டெல்லி: கொரோனா பரவல் என்பது முழுமையாக குறையாத நிலையில் விழா காலத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா 2ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனிடையே ஒருசில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகள் திறப்பது, வணிக வளாகங்களுக்கு அனுமதி போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தின் போது மக்கள் அதிகளவில் ஓரிடத்தில் கூடுவதால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மொஹரம், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்ரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இப்பண்டிகைகள் காரணமாக மக்கள் ஓரிடத்தில் திரளுவார்கள் என்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, இதனை தடுக்க உள்ளூர் அளவில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொற்று உள்ளோரிடம் தொடர்பில் இருந்தவரை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது, தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொய்வில்லாமல் மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் 40,000 கடந்து அதிகரித்து வருவதால் மாநில அரசுகளை ஒன்றிய அரசு உஷார்படுத்தியுள்ளது.

Related Stories: