தமிழகத்தில் நாள்தோறும் சமையலுக்கு 1 கோடி லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது

வேலூர்: பயோ டீசல் உற்பத்திக்கு வேலூர் மாவட்ட ஒட்டல்களில் இருந்து மட்டும் 1,300 லிட்டர் கழிவு எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த டீசல் தேவையில் 30 சதவீதம் பூர்த்தியாகும் என்று உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கான மாற்றை கண்டறியவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாற்று எரிசக்தி உற்பத்திக்கான தேவையை கண்டறிவதன் கட்டாயம் கடந்த 70களிலேயே ஏற்பட்டது. இதையடுத்து சூரிய சக்தி பயன்பாடு உட்பட பல்வேறு நிலைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சூரிய சக்தியை கொண்டு குறிப்பிட்ட சதவீத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்தாலும், பெருகி வரும் மக்கள் தொகை, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தொடர் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அதேநேரத்தில் பொருளாதார ரீதியிலான சிக்கலை தவிர்ப்பதற்கும் உரிய வகையில் உயிரி தொழில்நுட்பத்தில் எரிபொருள் உற்பத்திக்கான ஆய்வுப்பணிகள் தீவிரமடைந்தன.அதன் அடிப்படையில் பல நாடுகள் பயன்படுத்திய சமையல் எண்ணெய், தாவர எண்ணெய், எத்தனால், கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகளில் இறங்கின. இதில் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத தாவர எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, எத்தனால், பயன்படுத்திய தாவர எண்ணெய் ஆகியவற்றின் மூலம் டீசல் உற்பத்திக்கான வழிவகைகள் காணப்பட்டன. இதில் ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலந்து வாகனங்களும், தொழிற்சாலை இயந்திரங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெயில் இருந்து உயிரி டீசல் உற்பத்தி செய்ய மத்திய மரபுசாரா எரிசக்தி துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தன.அதன் அடிப்படையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் ஓட்டல்களில் தினமும் மீதமாகும் கழிவு சமையல் எண்ணெய் மீண்டும் சாலையோர கடைகளுக்கு மறுபயன்பாட்டுக்கு வருவதை தடுத்து பயோ டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல் நாடு முழுவதும் 33 இடங்களில் பயோ டீசல் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்திலும் சோதனை ஓட்டமாக கடந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட கழிவு எண்ணெய்களை சேகரித்து அதன் மூலம் பயோ டீசல் உற்பத்தி செய்யும் பரிசோதனை முயற்சி தொடங்கியது. இதன் வெற்றியை அடுத்து தமிழகத்தில் சென்னையை அடுத்த திருக்கழுகுன்றத்தில் யாந்த்ரா பின்டெக், திருப்பூரில் எம்எஸ் ஜிகே பயோடெக் புராடக்ட்ஸ் என இரண்டு நிறுவனங்களுக்கு பயோ டீசல் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக பெரிய ஓட்டல்களில் இருந்து கழிவு எண்ணெய் சேகரித்து அனுப்புவதற்கு தனித்தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தென்காசியில் அதையொட்டிய தென்மாவட்டங்களில் இருந்து சேகரித்து அனுப்பப்படும் கழிவு எண்ணெய் ஒட்டுமொத்தமாக கேரள மாநிலத்தில் செயல்படும் பயோ டீசல் உற்பத்தி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அதற்கென நியமிக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகள் மூலம் கழிவு எண்ணெய் சேகரிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் அடுத்த வாரம் இப்பணிகள் தொடங்குகிறது. வேலூரில் முதல்கட்டமாக இங்குள்ள 2 பெரிய ஓட்டல்களில் கழிவு எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. இதுவரை வேலூரில் 1,300 லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவு எண்ணெய் மூலம் உற்பத்தியாகும் டீசல், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையில் 30 சதவீதம் பூர்த்தியாகும். அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் முழுமையாக பயோ டீசல் உற்பத்திக்கான பணிகள் இந்த மாதம் (ஆகஸ்டு) பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நோக்கம் முழுமையடையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்துவதை எங்கள் துறை உறுதி செய்யும். நிச்சயம் இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கழிவு எண்ணெய்யில் இருந்து பயோ டீசல் உற்பத்தி செய்வதில் முக்கிய மைல்கல்லை நமது நாடு எட்டும்’ என்று தெரிவித்தனர்.

கழிவு எண்ணெய் ஏற்படுத்தும் பாதிப்பு

சமையல் எண்ணெய்யை ஒன்று அல்லது இரண்டுமுறை உணவு பொருட்கள் சமைக்க பயன்படுத்தலாம். அதன் பிறகு அதை பயன்படுத்தினால் அதில் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடுபவர்கள் கல்லீரல் பாதிப்பு உட்பட குடல்சார்ந்த பிரச்னைகளுடன், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம்.

சமையல் எண்ணெய் பயன்பாடு

தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 1 கோடி லிட்டர் பாமாலின், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் லிட்டர் கழிவு எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெயில் 90 சதவீதம் மீண்டும், மீண்டும் வீடுகள், தெருவோர கடைகள், சிறிய ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>