கொரோனா தடுப்பூசி பூஸ்டர்கள் செலுத்துவதற்கு WHO எதிர்ப்பு : பணக்கார நாடுகளின் செயல் நியாயமற்றது எனவும் சாடல்!!

ஜெனீவா : கொரோனா தடுப்பூசி பூஸ்டர்கள் செலுத்துவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, 2வது மற்றும் 3வது அலைகள் பல நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இதுவரை 20 கோடி பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியை பல நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.முதல் தவணை மற்றும் 2வது தவணை தடுப்பூசிகளை செலுத்தி உள்ள இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பூஸ்டர் செலுத்தும் பணியை தொடங்கி உள்ளன.

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹர்சோக் 3வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதுடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் தடுப்பூசி பூஸ்டர் செலுத்தும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் வலியுறுத்தி உள்ளார்.ஏழை நாடுகள், 1. 5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், பணக்கார நாடுகளின் இத்தகைய செயல் நியாயமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,தடுப்பூசி விநியோகத்தில் உடனடியாக நாம் மாற்றம்  செய்ய வேண்டி உள்ளது.அதிக வருவாய் கொண்ட பணக்கார நாடுகளுக்குஅதிகமாக தடுப்பூசி வழங்காமல்,குறைந்த வருவாய் உள்ள ஏழை நாடுகளுக்கு அதிகமாக தடுப்பூசி வழங்க வேண்டும்.அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10% மக்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.செப்டம்பர் மாதம் வரை பூஸ்டர்கள் போடுவதை நிறுத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொள்கிறது,என்றார்.   

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதாகவும் பெருந்தொற்று பரவல் காலத்தின் நடுப்பகுதியில் உலகம் இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளும் இதில் இருந்து விடுபட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுளளது. ஒரு சில நாடுகள் தடுப்பூசி செலுத்துவதால் கொரோனா ஒழிக்க முடியாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே ஏழை நாடுகளில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி பெற பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related Stories: