தொடர் அமளியால் 12வது நாளாக அவைகள் ஒத்திவைப்பு நாடாளுமன்றம் முடங்க ஒன்றிய அரசே காரணம்: 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக குற்றம்சாட்டி உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 11 நாளாக முடங்கியது. நேற்று 12வது நாளாக காலை 11 மணிக்கு மக்களவையில் கூடியதும், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நடத்த முடியாமல் சபாநாயகர் அடுத்தடுத்து ஒத்திவைத்தார். இறுதியாக மாலை 3.30 மணிக்கு அவை கூடியதும், தேங்காய் மேம்பாட்டு ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையும் நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை திருத்த மசோதா, வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிலையில், நாடாளுமன்றம் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த முடியாமல் முடங்குவதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்த 18 தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: பெகாசஸ் பிரச்சனை மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க  வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீர்குலைப்பதாக குற்றம் சாட்டுவது துரதிருஷ்டவசமானது. நாடாளுமன்ற முடங்குவதற்கான ஒன்றிய அரசுதான் காரணம். இது, இப்பிரச்னைகள் பற்றி விவாதிக்்க ஒன்றிய அரசு விவாதிக்க மறுப்பது ஆணவ செயலாக உள்ளது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்தும், விவாதத்தை நடத்த அரசு மறுக்கிறது. விவாதத்திற்கான கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 திரிணாமுல் எம்பிக்கள் சஸ்பெண்ட்

மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டப்படி, அவையின் மையப்பகுதிக்கு சென்று கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். அவர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி அவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், ‘அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். இல்லை என்றால், 255 விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரித்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கையில் பதாகைகளுடன் கோஷங்களை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து,  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.க்கள் டோலா சென், எம்.டி. நாதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சவுத்ரி, அர்பிதா கோஷ் மற்றும் மவுசம் நூர் ஆகிய 6 எம்பி.க்கள் நேற்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.

குடியுரிமை சட்டத்தை திருத்தும் திட்டமில்லை

குடியுரிமை திருத்த சட்டத்தில் ஏதேனும் திருத்தங்களை அரசு பரிசீலித்து வருகிறதா? என்று மாநிலங்ளவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியான்தா ராய் அளித்த பதிலில், ‘‘அப்படிப்பட்ட எந்த யோசனையும் அரசுக்கு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்கள், குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்களை அரசால் உரிய விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமர்ப்பிக்கலாம்,’’ என்றார்.

Related Stories: