×

அலுவலகத்தை சுற்றி கேமராவை போட்டதால் அரண்டு கிடக்கும் காக்கிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் கேமரா பொருத்தியதில் பெரிய பின்னணி இருக்காமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘சென்னை  எழும்பூரில் சிபிசிஐடி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வெளியே உள்ள  பகுதி முதல் பல்வேறு இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா  கண்களில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது. இதற்கு ஒரு பெரிய வரலாறே  இருக்கு. நடிகர் அஜித்தின் மனைவி நடிகை பெயர் கொண்ட  இன்ஸ்பெக்டர் பணியாற்றுகிறாராம். இவர், ஒரு வழக்கில் குற்றவாளியிடம்,  வழக்கில் சேகரித்த அனைத்து ஆவணங்களையும் அலுவலகத்துக்கே வரவழைத்து கொடுத்து  விட்டாராம். இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும், அதிகாரிகள்  அதிர்ச்சியாகிவிட்டார்களாம். ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட  இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போது ஐஜியாக இருந்த சிவனின் மறு பெயர் ெகாண்டவர் தடுத்து விட்டாராம். அவருடைய ஆசி முழுமையாக இருந்ததால் நடவடிக்கை  எடுக்கப்படலையாம். இந்த தகவல் புதிதாக வந்த டிஜிபிக்கு தெரிந்ததும்,  நேர்மையான அதிகாரியான ஷகீல் அக்தர், அலுவலகத்தை சுற்றி சுற்றி கேமரா போட  உத்தரவிட்டாராம். இதனால் அலுவலக வளாகத்தில் நின்று பேசவே  பயப்படுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘கடந்த ஆட்சியில் சுகர் ஆலை தலைவர் பல லட்சங்களை சுருட்டியிருக்காரமே.. விஷயத்தை விரிவா சொல்லு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில்  ஆட்சி போயும் ஆனந்தமானவரின் ஆட்டம் குறையவில்லையாம். கடந்த அதிமுக  ஆட்சியில் தெர்மாகோல் புகழ் அமைச்சருக்கு ‘சுக’மான கவனிப்பை ஏற்பாடு  செய்து வெயிலூர் மாவட்டத்தில் திருவான வலம் கூட்டுறவு சுகர் மில்  நிர்வாகத்துக்கு தேர்தல் நடத்தாமலேயே ஆனந்தமானவர் தலைவரானார். இவர்  பொறுப்பேற்றதில இருந்து மில்லிற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்காமலேயே  வாங்கியதாக பில் போட்டு பல லட்சங்களை சுருட்டிவிட்டாராம். மேலும் கூட்டுறவு  பெட்ரோல் பங்கில் வேலைக்கு ஆட்களை தகுதி அடிப்படையில் பணத்தினை வாங்கிக்  கொண்டு  பணியை வழங்கினாராம். அதோட கடந்த ஆண்டு சுகர் மில்லில்  ஓய்வுபெற்ற பணியாளர்களின் வாரிசுதாரர்களிடம் பல லட்சங்களை பெற்றுக்கொண்டு  40க்கும் மேற்பட்ட கருணை அடிப்படையிலான பணியாணைகளையும் வழங்கினாராம்.  அதற்கு இடைஞ்சலாக இருந்த 2 மேலாண்மை  இயக்குனர்களை அமைச்சரின் ஆசியோடு  பணியிட மாறுதல்  செய்து தனக்கு சாதகமானவரை பணியில் அமர்த்திக் கொண்டு,  பல்வேறு பணியிடங்களில் பணி வழங்குவதாக சொல்லி லட்சக்கணக்கில் வசூலித்தும்  விட்டாராம். ஆனால் இன்று வரை பணம் கொடுத்தவர்களை வேலையில் சேர்க்காமலும்  பணத்தை திரும்ப வழங்காமலும் எஸ்கேப் ஆகி வர்றாராம். இவரால பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கும் மூடில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியனந்தா.

 ‘‘பதவி உயர்வை மறுத்து மாவட்டத்தில் ‘பவர் புல்லாக’ வலம் வரும் அதிகாரியின் தைரியத்தை பாராட்ட வேண்டும்... எப்படியெல்லாம் அரசு விதிகளை வளைக்கிறார்கள்...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘குமரி  மாவட்ட வருவாய் அலுவலர் 27 நட்சத்திரங்களில் ஒன்றின் பெயரை கொண்ட பெண் அதிகாரி அவர். கடந்த 2018ம் ஆண்டு முதலே குமரி  மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் ஜூலை மாதம் நிலம் எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதேபோல, குமரி மாவட்ட வருவாய்  அலுவலராக தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக பொதுமேலாளர் ஊர்வசி பட்டம் வாங்கிய நடிகையின் பெயரை கொண்ட பெண் நியமிக்கப்பட்டார். டிரான்ஸ்பர் வழங்கி ஒரு மாதம் ஆகியும், புதிய அதிகாரி, பணியில் சேரவில்ைல. பழைய அதிகாரி  குமரியில் இருந்து மாறுதலாகி செல்ல தயாரானபோது. புதிய அதிகாரியை அழைத்து  இங்கு வரவேண்டாம் என்று சொல்லிட்டாங்களாம். நான்கு  ஆண்டுகளாக ஒரே பதவியிடத்தில் இங்குள்ள பெண் அதிகாரி தொடர்கிறாரே என்று  துறைக்குள் பேச்சுவந்தபோது, அந்த பெண் டென்ஷன் ஆகிட்டாராம். 15 ஆண்டுகளாக கலெக்டர்  அலுவலகத்தில் ஒரே பணியிடத்தில் அதுவும் முக்கிய பதவியில் அதிகாரி ஒருவர் தொடர்கிறாரே, இது யாருடைய கண்ணுக்கும்  தெரியவில்லையா.

பதவி உயர்வும் வேண்டாம், இந்த  பணியிடமே போதும் என்று சட்டத்தை வளைத்து மாவட்டத்தில் தற்போது அவர் ‘‘பவர் புல்’’ அதிகாரியாக வலம் வருகிறார். அதை கேட்க முடியவில்லை, என்னைகேள்வி கேட்கிறார்கள் என்று பொறிந்து தள்ளினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘இலை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமா... அந்த விஜயமானவர், ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சி  நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதில்லை. கட்சியில்  தனக்கு எதிராக சதி செய்கிறார்கள். இதனால் ஒதுங்கி இருக்கிறேன் என கூறி  வந்தார். கடந்த இலை ஆட்சியின் போது, இவர் கொடுத்த நிதியை கூட  பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயம், அரசியலில் இருந்து தற்ேபாது ஒதுங்கி இருக்கிறாராம். எந்த பங்ஷனிலும் பார்க்க முடிவதில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா. <



Tags : He puts the camera around the office and tells about the two khakis lying around: wiki yananda
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...