நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒன்றிய அரசின் வரி வருவாய் இரட்டிப்பு மாநில பங்களிப்பு 12.3 சதவீதம் குறைப்பு

சென்னை: ஒன்றிய அரசின் வரி வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வர வேண்டிய பங்களிப்பை குறைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் பெரும்பாலும் வரி வருவாயையே பெருமளவுக்கு நம்பியுள்ளன. அதிலும், ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. இதுதவிர, நேரடி வரி வருவாயாக நிறுவன மற்றும் தனி நபர் வருவாயும் ஒன்றிய அரசுக்கு வருகிறது. இந்த வருவாய் எல்லாம் அதிகரித்து வரும்போதும், மாநிலங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பை தராமல், ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாய் 5.31 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டில் ₹2.69 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. இதன்படி, மாநில அரசுக்கு பங்களிப்பாக 1.17 லட்சம் கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த பங்களிப்பு 1.37 லட்சம் கோடியாக இருந்தது.  வழக்கமாக வர வேண்டியதை விட குறைவாக மாநிலங்களின் பங்களிப்பாக ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் 22% தான்.

 மாநிலங்களுக்கான இந்த பங்களிப்பானது, பொதுவாக, மாதாந்திர பட்ஜெட் மதிப்பீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அளிக்கப்படுகிறது. கடந்த 2020-21 நிதியாண்டில் இந்த பங்களிப்பு பட்ஜெட் மதிப்பீட்டில் 6 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டிலும் இதே சதவீதம்தான். இது கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இக்ரா ரேட்டிங்ஸ் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், ‘‘வரும் மாதங்களிலும் மாநிலங்களின் மாதாந்திர பங்களிப்பு ₹39,175 கோடியாக வைத்திருப்பது, மாநிலங்களின் நிதியில் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதனை உடனடியாக உயர்த்த வேண்டியது அவசியம்’’ என குறிப்பிட்டுள்ளார். இதையே பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இது, மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறையை அதிகரித்து,  மேலும் கடன் வாங்கும் நிலைக்கு இட்டுச்செல்லவும், சுமையை அதிகரித்து தள்ளாடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

 பொதுவாக, மாநிலங்களுக்கான பகுக்கக்கூடிய பங்கீட்டு வரி, ஒன்றிய அரசின் வருவாயில் சுமார் 41 சதவீதமாக இருக்கும். அதாவது, பட்ஜெட் மதிப்பீடாக இந்த அளவுக்காவது உயர்த்தப்பட வேண்டும். ஆனால், செஸ் வரி போன்றவை இந்த பங்கீட்டுக்குள் வருவதில்லை. மத்திய அரசின் நேரடி வரி வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.14 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 3.29 சதவீதமாகவே இருந்தது. நடப்பு ஆண்டில் வரி வருவாய் உயர்ந்ததற்கு, நிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி வசூல்தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 மாநிலங்களின் பங்களிப்பாக வழங்கப்படும் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுகிறது. ஆனால், ஒரு போதும், மாநிலங்கள் கேட்ட அளவுக்கு அல்லது அவர்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய அளவு கூட ஒன்றிய அரசால் வழங்கப்படுவதில்லை எனவும், பெரும்பாலும் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி இந்த பங்களிப்பு தொகை இழுத்தடிக்கப்பட்டோ, மறுக்கப்பட்டோ வருகிறது என கூறப்படுகிறது. ஒன்றிய அரசிடம் தங்களுக்கு தர வேண்டிய பங்கை கேட்டு மாநிலங்கள் போர்க்கொடி தூக்கிய சம்பவங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன என பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாநிலங்களின் மொத்த வரி வருவாயில் சுமார் 25 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பை நம்பியே உள்ளது. இந்த சூழ்நிலையில், கொரோனாவால் வருவாய் இழந்து தவிக்கும் மாநிலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இ-வே பில் ரொம்ப இல்ல ஆனாலும் வருவாய் குறையல

கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான 8 மாதங்களாக, ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நீடிக்கிறது. இதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் , கடந்த ஏப்ரல் மாதம் வரை ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருந்துள்ளது. ஊரடங்கு காரணமாக, இ-வே பில்கள் அதிகமாக இல்லை. பொருளாதார நடவடிக்கைகளும் குறைவுதான். அப்படி இருந்தும் தொடர்ச்சியாக 8 மாதங்களுக்கு தனது இலக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி ஈட்டிய ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பை தராமல் தாமதம் செய்வது மாநிலங்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>