எண்ணெய் கப்பல் கடத்தல் ஓமன் வளைகுடாவில் மர்மம்

புஜிரா: பனாமாவில் பதிவான ‘ஆஸ்பால்ட் பிரின்சஸ்’ என்ற எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜிரா துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்டு,  ஓமன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டு இருந்தது. அப்போது, அந்த கப்பல் திடீரென கடத்தல் கும்பலால் வழிமறிக்கப்பட்டு, ஈரான் நோக்கி செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கப்பல் ஈரான் நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்நிலையில், இங்கிலாந்து ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பானது, ‘கப்பல் தற்போது பாதுகாப்பாக இருக்கிறது,’ என கூறியது. வேறு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

கடத்தப்பட்ட கப்பல் எப்படி திடீரென விடுவிக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. செயற்கைக்கோள் ஆதாரங்கள் மூலமாக பார்க்கையில், இந்த கப்பல் ஜாஸ்க் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை ஈரான் கடல் பகுதியை நோக்கி நகர்வதாக அடையாளம் காட்டியது.எண்ணெய் கப்பலை கடத்தி, விடுவிக்கப்பட்ட சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டதும், விடுவிக்கப்பட்டதும் மர்மமான சம்பவமாகவே உள்ளது. இந்த கடத்தலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனை ஈரான் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் காதீப்சாடே கூறுகையில், ‘‘சமீபகாலமாக கப்பல்களின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் முழுவதும் சந்தேகத்துக்குரியது. இதில், ஈரான் எந்த பங்கும் வகிக்கவில்லை,” என்றார்.

Related Stories: