கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

மாமல்லபுரம்: உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனாவை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், பொதுமக்கள் சிலர் அலட்சியத்துடன் சாலைகளில் கூட்டமாக நடந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா 3வது அலை பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு அருகே சாலையில் கொரோனா வைரசுக்கு முககவசம் அணிவது போல் ஓவியம் வரைந்தும், சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேப்போல், மாமல்லபுரம் அரசு மருத்துவமனை மற்றும் மாமல்லபுரம் தனியார் அமைப்பு இணைந்து பஸ் பயணிகள், காவலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு முககவசம், கபசுர குடிநீர், சத்து மாத்திரை ஆகியவை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தனியர் அமைப்பு தலைவர் மதிபிரகாசம், செயலாளர் முகமது சாலிஷ், பொருளாளர் தேவேந்திரன், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, சித்தா ஆயுஷ் மருத்துவர் வானதி நாச்சியார், சித்த மருத்துவர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா விழிப்புணர்வு வார விழா (ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை) நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் துவங்கியுள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கொரோனா விழிப்புணர்வு வார விழா நடந்தது. அப்போது, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பஸ்களில் ஏறி, அதில் இருந்த பயணிகளிடம் முகக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தினார். அவர்களுக்கு, கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.இதில்,  நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி  ஊழியர்கள் கொரோனா குறித்த  விழிப்புணர்வு கோலங்கள் வடிவரை, கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

காஞ்சிபுரம்: கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் முகாம், காஞ்சிபுரம் நகராட்சி, பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் லட்சுமி தலைமை வகித்தார். கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரைகளை வழங்கினார்.பெரும்புதூர்: பெரும்புதூர் அடுத்த பென்னலூர் சுங்கச்சாவடி அருகில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமல்ராஜ் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசி, மஞ்சுநாதன், ராஜேந்திரன், ஊராட்சி செயலர்கள் தண்டலம் ரமேஷ், இருங்காட்டுகோட்டை ரமேஷ், பென்னலூர் மதுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவி கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்று கொண்டு துண்டு பிரசுரங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். பின்னர்  அனைவரும் கொரோனாவை தவிர்க்கும் நோக்கில் அரசு வழிமுறைகளை பின்பற்றும் விதமாக கையெழுத்து இயக்க பலகையில் கையொப்பமிட்டனர்.

Related Stories:

>