கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் விழிப்புணர்வு உறுதிமொழி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி சிறப்புநிலை பேரூராட்சியில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி சிறப்புநிலை பேரூராட்சியின் 18 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது, கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். பின்னர், பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது. தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், தினமும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சியில் நல்லம்பக்கம், கண்டிகை, மெல்ரோசபுரம், காந்தி நகர், அம்பேத்கர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கொரோனா 3வது அலையை தடுக்கும் விதத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் கண்டிகை பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். இதில், 185 பேர் ஆர்வமுடன் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

Related Stories: