5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

உத்திரமேரூர்: உத்தரமேரூர் அருகே தளவராம்பூண்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலான ₹3 கோடி மதிப்பு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிகாரிகள் மீட்டனர். உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை, சிலர் ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனையில் ஈடுபடுவதாக வருவாய்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார்  அளித்தனர். அதன்பேரில் வட்டாட்சியர் உமா தலைமையில், வருவாய் துறையினர், நேற்று சம்பவ இடத்துக்கு சென்று அங்கு ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ₹3 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிந்தது.இதையடுத்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர், அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி அரசு நிலங்களை மீட்டனர். பின்னர், அங்கு அறிவிப்பு பலகை வைத்து, யாரும் ஆக்கிரமிக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாபாத்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இக்கோயிலுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். அதன்பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆவணங்கள் மூலம் அறிந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வாலாஜாபாத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும்  சாலையை ஒட்டி வாலாஜாபாத் நகரில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் இருப்பது தெரிந்தது.  இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்து, ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டனர். தொடர்ந்து, அந்த இடத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு  பலகையும் அங்கு வைத்தனர்.  மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹2 கோடி என கூறப்படுகிறது.

Related Stories:

>