பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு போட்டிகள்: இன்றும், நாளையும் நடைபெறுகிறது

சென்னை: பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைய வழியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில்  தொடங்கி வைத்தார். அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.8.2021 முதல் 7.8.2021 வரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், மாநகராட்சி சார்பில் இன்று மற்றும் நாளை கோவிட் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு இணையவழியில் நடத்தப்பட உள்ளது. அந்தவகையில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தரப்பினருக்குமான சுவரொட்டி தயாரிப்பு போட்டி, ஓவியப் போட்டி, விழிப்புணர்வு வாசகப் போட்டி, மீம்ஸ் போட்டி நடைபெறும். நாளை (6ம் தேதி) பிற்பகல் 1 மணி முதல் மாலை 2 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வினாடி, வினா போட்டியும் நடைபெறும். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சென்னை மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதள இணைப்பில் தங்களது படைப்புகளை குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த 3 படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வரும் சுதந்திர தினத்தன்று (15ம் தேதி) வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை மாநகராட்சியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>