டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், மல்யுத்த வீரர் ரவிகுமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து இந்தியாவுக்கு 4வது பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 125 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட குழுவுடன் களமிறங்கிய இந்தியா பதக்க வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்திலேயே மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றது நம்பிக்கையை அதிகரித்தது. எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் முன்னணி வீரர், வீராங்கனைகள் சாதிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, பாக்சிங் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன்  வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா தகுதி பெற்றதை அடுத்து, இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதியானது. ரவிகுமார் பைனலில் விளையாடுவதால் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக மோதுவது, ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியிருப்பது மற்றும் மல்யுத்தத்தில் தீபக் புனியா வெண்கலப் பதக்கத்துக்காக களமிறங்குவது பதக்க எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதியுடன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைய உள்ள நிலையில்... சீனா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பதக்க பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்தியா 65வது இடத்தில் உள்ளது.

Related Stories: