டெல்லி சிறுமி பலாத்கார கொலை தொடர்பாக அமித் ஷா பதிலளித்தால் ‘மொட்டை’ அடித்துக் கொள்கிறேன்: 7 நிமிடத்தில் 12 மசோதா நிறைவேற்றம்; திரிணாமுல் எம்பி காட்டம்

புதுடெல்லி: டெல்லி சிறுமி பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளித்தால் மொட்டை அடித்துக் கொள்வதாக, திரிணாமுல் எம்பி காட்டமாக பேட்டி அளித்துள்ளார். பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக கடந்த 11 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், எதிர்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்ற அவைகளில் உள்துறை அமைச்சரை நான் பார்க்கவில்லை. இந்திய  பிரதமரை நான் பார்க்கவில்லை. டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட ‘அவர்’  (குஜராத் கேடர் சிபிஐ முன்னாள் அதிகாரி), டெல்லியில் ஒன்பது வயது தலித்  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (இன்று) நாடாளுமன்றத்திற்கு வந்து டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பதில் அளித்தால், நான் மொட்டையடித்துக் கொள்கிறேன். பெகாசஸ் என்றாலே, அமித் ஷா ஓடுகிறார். எதிர்கட்சிகள் நாடகம் நடத்துவதாகவும், நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் கூறுகின்றார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் மிகவும் தெளிவாக உள்ளன. பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் மூன்று பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க விரும்புகிறோம்.

குறிப்பாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. கடந்த ஏழு ஆண்டுகால பாஜக ஆட்சியில் 11 சதவீத அளவிற்கு மட்டுமே மசோதாக்களை ஆய்வு செய்தது. அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 60-70 சதவீதமாக இருந்தது. குஜராத் முதல்வர் (பிரதமர் மோடி) இங்கு வந்தபோது, ​​அதை 25 சதவீதமாகக் குறைத்தார். இப்போது அவர் டெல்லியில் குடியேறியதால், அது 11 சதவீதமாகிவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டில் இருந்து இதுவரை எத்தனை கேள்விகளுக்கு மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்? ஒன்றுமில்லை. நாடாளுமன்றத்தை அவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடத்த விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்புகின்றன. ஏழு நிமிடங்களில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு அவைகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகளின் வாதங்களை மோடியும், அமித் ஷாவும் புரிந்து கொள்ளவில்லை’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories: