திருவில்லிபுத்தூர் அருகே தீப்பெட்டி குடோனில் தீ: போலீஸ் விசாரணை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே நேற்றிரவு தீப்பெட்டி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(42). இவருக்கு சொந்தமான இரண்டு தீப்பெட்டி குடோன்கள் இனாம் கரிசல்குளம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு தீப்பெட்டி குடோன்கள் அருகே உள்ள குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென அருகில் உள்ள தீப்பெட்டி குடோனுக்கு பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து திருவில்லிப்புத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோரின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ராஜபாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால், ஒரு தீப்பெட்டி குடோனில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில், குடோனில் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமானது.

தீப்பிடித்து எரிந்த தீப்பெட்டி குடோனை வன்னியம்பட்டி போலீசார் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகு தான் சேதமதிப்பு எவ்வளவு என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தீப்பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் திருவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>