கோவாக்சின் 2ம் டோஸ் செலுத்த மக்கள் ஆர்வம்: குமரியில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டுகிறது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டுகின்ற நிலையில் இன்று கோவாக்சின் 2ம் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வெட்டூர்ணிடம் புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில் இந்து கல்லூரி ஆகிய இடங்களில் 18 முதல் 44 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் டோக்கன் பெறப்பட்ட நிலையில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நேரடியாக டோக்கன் வழங்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சால்வேஷன் ஆர்மி பள்ளி, கோட்டார் டிவிடி பள்ளி, வடசேரி அரசு மேல்நிலை பள்ளி, வடசேரி அரசு மேல்நிலை பள்ளி (மலையாளம் பள்ளி), பறக்கை சிடிஎம் புரம் அரசு பள்ளி, குருசடி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை மொத்தம் 5 லட்சத்து 94 ஆயிரத்து 124 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 90 ஆயிரத்து 831ம், 2ம் டோஸ் 1 லட்சத்து 3 ஆயிரத்து 293 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் 2 லட்சத்து 95 ஆயிரத்து 52 ேபரும்,  பெண்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 970 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>