குமரியில் 3 நாட்களுக்கு பிறகு கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி: முக கவசம், சமூக விலகல் கடைபிடிக்க அறிவுறுத்தல்

நாகர்கோவில்: 3 நாட்களுக்கு பின் கோயில்களில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா 3 வது அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கோயில்களில்  கூடுவார்கள். இதனால் கொரோனா பரவல் அதிகரிப்பு வாய்ப்பு உண்டு என்பதால் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதே போல் ஆடி அமாவாசையான  வருகிற 8ம்தேதி (ஞாயிறு) அன்றும் பக்தர்கள் நீர் நிலைகளில் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல் 3 நாட்களுக்கான தடை நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று காலையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் 3 நாட்களுக்கு பின், இன்று காலை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் முககவசம் அணிந்திருந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சானிடைசர் வழங்கப்பட்டு தெர்மல்  ஸ்கேன் பரிசோதனைக்கு பின் தான் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின் கோயில்களில் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கூறினர்.

Related Stories:

>