தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் நாளை பெருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி நடக்கிறது

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நாளை பெருவிழா நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2வது ஆண்டாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா  ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு நாடுகள்,  மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு தூய பனிமய அன்னையின் 439-ம் ஆண்டு பெருவிழாவானது கடந்த 26ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்திற்கு  பின்னர் இறைமக்கள் ஆலயத்திற்குள் பிரார்த்தனை செய்ய அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்டனர்.

அதாவது கூட்டம் கூட்டமாக வராமல் தனியாக வந்து ஆலயத்தில் ஜெபம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் வண்ண மின்  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. இன்று 10ம் திருவிழாவையொட்டி காலை 5 மணிக்கு ஜெபமாலையும், 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 6.30 மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு 3ம் திருப்பலியும், 8.30 மணிக்கு 4ம் திருப்பலியும், 9.30 மணிக்கு 5ம் திருப்பலியும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7 மணி ஆளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது.

 11ம் திருவிழாவான பெருவிழாவையொட்டி நாளை (வியாழன்) காலை ஜெபமாலையும், 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் 2ம் திருப்பலியும், 10 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் 3ம் திருப்பலியும், 12 மணிக்கு 4ம் திருப்பலியும், மாலை 5 மணிக்கு  பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் 5ம் திருப்பலியும் நடக்கிறது. முன்னதாக மாலை 3 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.

அனைத்து நிகழ்ச்சிகளும் டி.வி. மற்றும் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஏற்பாடுகளை தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குத்தந்தை குமார்  ராஜா செய்துள்ளார். திருவிழாவையொட்டி தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார்,   டிஎஸ்பி கணேஷ் ஆகியோரது தலைமையில்  400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2வது ஆண்டாக சப்பர பவனி ரத்து

வழக்கமாக 10ம் நாள் திருவிழா அன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக 2வது ஆண்டாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>