கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சுதந்திர தின விழாவில் முன்னெச்சரிக்கை அவசியம்: உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுரை

புதுடெல்லி: கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், சுதந்திர தின விழாவில் முன்னெச்சரிக்கை அவசியம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. நாட்டின் 74வது சுதந்திர தினவிழா வரும் 15ம்  தேதி கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். அதேபோல், அந்தந்த மாநில முதல்வர்கள், முக்கிய அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா பரவலுக்கு மத்தியில் சுதந்திர தினவிழா நடப்பதால், தொற்று மேலும் பரவிவிடும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்க வேண்டும். தேச பக்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மக்களிடம் பரப்ப வேண்டும்.

தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும். முக்கிய இடங்கள், முக்கிய பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும். ‘ஆத்மநிர்பார் பாரத்’ பொருளாதார திட்டம் போன்றவற்றை மக்களிடம் பரப்பும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும். விழா கொண்டாடப்படும் இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>