கன்னியாகுமரி அருகே பரபரப்பு நடுக்கடலில் விசைப்படகு எரிந்து நாசம்: மீனவர்கள் 14 பேர் கடலில் குதித்து உயிர் தப்பினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த விசைப்படகில் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், படகு டிரைவர்கள், மெக்கானிக்குகள் என்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து தினமும் அதிகாலையில் மீன்பிடிக்க புறப்படுகிறார்கள். பின்னர் ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு மாலை கரை திரும்புவது வழக்கம். வழக்கம் போல் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த சகாய ஆன்றனிக்கு சொந்தமான மிக்கேல் என்ற விசைப்படகில் மேல்ஞானசெல்வம் (49) தலைமையில் 14 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு மாலையில் கரை திரும்பினர். இரவு சுமார் 9.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கூட்டபுளி பகுதியில் தெற்கு சின்னமுட்டத்தில் இருந்து சுமார் 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தனர். அப்போது விசைப்படகின் இன்ஜின் பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது. கடலில் காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென எரிந்தது. இதில் படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடிக்க பயன்படுத்தும் வலை உள்பட உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. படகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் உயிர் பிழைப்பதற்காக 14 பேரும் கடலில் குதித்து தப்பினர்.

அப்போது மீன்பிடித்துவிட்டு அந்த பகுதி வழியாக கரை திரும்பி கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த போஸ்கோவின் படகில் 14 பேரும் ஏறி கரை திரும்பினர். இந்த சம்பவத்தில் விசைப்படகு முற்றிலும் எரிந்தது. இதனால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சின்னமுட்டம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இன்ஜின் பழுது காரணமாக தீ பிடித்ததாக தெரியவந்துள்ளது. இன்று அதிகாரிகள் சம்பவம் நடந்த கடல் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். தீ எரிந்த விசைப்படகின் எஞ்சிய பகுதி குறித்தும் ஆய்வு செய்கின்றனர். நடுக்கடலில் பிடித்து வைத்திருந்த மீனுடன் விசைப்படகு எரிந்து நாசமானது மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: